« Home | ரிங்வூட் ஸ்டேட் பார்க் » | CUBA and Fidel Castro ========================... » | ENTHIRAN -- REVIEW » | Movies - My classify » | A Good Song - My Definition » | ANGADI THERU -- REVIEW » | Dasavatharam -- Review » | Yawning » | India Rising » | Trillion »

********மரடோனா : சொந்த பதிவு *********

ஒருவர் தன் வாழ்நாளில் செய்யும் ஒவ்வொரு செயலுமே மற்றவரை ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வெற்றியின் அளவுகோலாக நாம் கருதும் எல்லையை எட்டாது மனநிறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கையில் பலரது கனவு எல்லைகளை எளிதில் கடந்து வந்திருக்கிறோமென்ற எண்ணமே இல்லாது வாழ்ந்து கொண்டிருப்போம். அப்படிப்பட்ட பல கோடி பேர்களின் ஒருவன் தான் நான், மரடோனாவின் கால்பந்தாட்ட ரசிகன்.

இத்தாலியா 90, மரடோனாவின் மூன்றாவது உலக கோப்பை. எனது முதலாவது கால்பந்தாட்ட ரசிகன் உருவான வருடம். அதற்கு முன்னரே இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கோல்களை போட்டு விட்டாரென்றாலும் அந்த முப்பது வயதில் அவரது ஆட்டத்தின் முதிர்ச்சி சிறந்த முறையில் வந்திருக்க வேண்டிய உலக கோப்பை. அனால் அவரை தன்னியல்பில் எதிரணியினர் ஆட விடவில்லை. இறுதி போட்டி வரை மரடோனாவை குறிவைத்தே மற்ற அணியினர் விளையாடினர். இதனாலேயே அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியிடம் தோற்றது.

இருந்தாலும் இத்தாலியா 90 காலிறுதி சுற்றில் அர்ஜென்டினா பிரேசில் மேட்சை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . இந்திய நேரப்படி இரவு ஏழரைக்கு தொடங்கியதாக நியாபகம். முழு ஆட்டம் யூடியூபில் இன்றும் உள்ளது. 90 சதவிகித நேரம் பிரேசிலிடம் தான் பந்து இருக்கும். எந்த நொடியும் பிரேசில் கோல் போட்டு விடுவார்கள் என்றே ஆட்டம் போய்க்கொண்டிருந்தது. முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்தே இன்னும் கூடுதலான தாக்குதலுடன் களமிறங்கினர் பிரேசில் அணியினர். மரடோனா களத்தில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. அந்த இக்கட்டான தருணத்தில் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கோலாக மாற்ற உதவி புரிந்தார் மரடோனா. பிரேசிலின் பெருவாரியான வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் பாதியிலிருக்க மரடோனா அந்த பந்தை நடு பாதியிலிருந்து பிரேசிலின் எல்லை வரை கடத்தி கொண்டு வந்து கனிஜ்ஜியாவிடம் பந்தை லாவகமாக அடிக்க கனிஜியா பிரேசிலின் தடுப்பாட்டக்காரர்களுக்கு போக்கு காட்டி கோலுக்குள் திணிப்பார்.

இதில் கோல் அடித்தது கனிஜியா, அவருக்கு உதவியது மரடோனா. தலை சிறந்த பல கோல்களை மரடோனா இதற்கு முன் அடித்திருந்தாலும் இன்னொருவர் கோல் அடிக்க உதவி செய்து அதன் மூலம் அர்ஜெண்டினாவின் வெற்றியை உறுதி செய்த இந்த கோலே தலை சிறந்த கோலாக நான் கருதுவேன் . எப்போதெல்லாம் மரடோனா நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ஒரு கோலை மட்டும் யூடியூபில் பார்த்து ரசித்து விடுவேன்.

மரடோனாவின் இந்த ஆட்டம் எனது பணியிலும் பிரதிபலித்திருக்கிறது. சில தருணங்களில் நான் பாதியில் விட்ட வேலையை என்னுடைய அணியிலுள்ள யாரவது செய்து முடித்தால் அப்போது மரடோனா போல் நானும் சாதித்து விட்டதாக எண்ணிக் கொள்வேன்.

94லிலும் மரடோனா களமிறங்கினார். போதை பொருள் உட்கொண்டதாக பிடிபட்டு உலக கோப்பை பாதியிலேயே தடை விதிக்கப்பட்டு வெளியேறினார். அதன் பின் நடந்த உலக கோப்பையில் 98, 02,06 பார்வையாளராக கூச்சலிட்டு கொண்டிருந்தார்.

2010 உலக கோப்பையில் அர்ஜென்டினா அணியின் கோச்சாக இருந்தார். மெஸ்ஸியை பெரிதும் நம்பி ஏமாந்து போயிருப்பார். அவர் மட்டுமல்ல என்பதுதான் ஒரே ஆறுதல். பிரீமியர் லீக் விளையாடுவதற்கும் உலக கோப்பை விளையாடுவதற்கும் வெவ்வேறு மனநிலையும் பயிற்சியும் தேவை. ஒரு பிளேயர் பிரீமியர் லீகில் சிறப்பாக விளையாடுவதை வைத்து உலகின் தலைசிறந்த வீரரென கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. எப்படி ஐ பி எல்லில் சிறப்பாக விளையாடுபவர் ஒரு நாள் போட்டியில் சொதப்புவாரோ அவ்வாறே மெஸ்ஸி பிரீமியர் லீகில் சிறப்பாக விளையாடி உலக கோப்பையில் சொதப்புபவர் . இவரை போன்றே இங்கிலாந்தின் ரூனியும் போர்ச்சுக்களின் ரொனால்டோவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவர்களையெல்லாம் பார்க்கையில் கிளப் ஆட்டங்களில் மட்டுமில்லாது உலக கோப்பையிலும் ஜொலித்து 86இல் கோப்பை வாங்க உறுதுணை புரிந்துள்ளார் மரடோனா. அதனால்தான் அவர் ஹீரோ, உலகமே கொண்டாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

1. இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் எப்படியோ அவ்வாறே மரடோனா அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியிலிருந்தார்.

2. இந்திய அணியில் எக்காலத்திலும் ஒரு ஸ்டார் பிளேயர் இருப்பார். கவாஸ்கர், சச்சின் என தற்காலத்து கோலி வரை. அதை போலவே மரடோனாவிற்கு பிறகு ஏரியல் ஒர்டேகா, பட்டிஸ்டுடா தற்கால மெஸ்ஸி வரை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள்

3. ஒரு உலக கோப்பையை வெல்லும் எல்லா தகுதியும் இந்தியவிற்கு இருக்கும். ஆனால் இரண்டே முறை தான் வென்றிருக்கிறார்கள். அதை போலவே அர்ஜென்டினா அணியும் இரண்டு முறை தான் வென்றுள்ளார்கள்.

4. முக்கியமான பல மேட்ச்களில் இந்தியா எப்படி சொதப்புமோ அதை போலவே அர்ஜென்டினா அணியும் சொதப்புவதில் வல்லவர்கள்.

ஆகையால், அர்ஜென்டினாவும் இந்தியாவும் ஒரே கப்பலில் பயணிப்பதை போலத்தான் உணர்வேன். அவர்கள் ஆடும் ஆட்டம்தான் வேறு.

என்ன காரணத்தினால் உடல் நலனை பேணாது வாழ்ந்திருந்தாரென்று நமக்கு தெரியாது இருந்தாலும் அவரது இடத்தை பிடிப்பதற்கு ஒருவர் இந்நேரம் வந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

Locations of visitors to this page