ஒற்றைப் பனை மரம்
https://www.youtube.com/watch?v=K3zzaSu7uEI'ஒற்றைப் பனை மரம்' என்கிற ஈழத் தமிழர் புதியவன் ராசையா என்பவர் இயக்கிய திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பற்றிய இயக்குனரின் நேர்காணல் ஒன்று யூடியூப் தளத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்னரே வெளிவந்துள்ளது. பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் வென்றுள்ளது.
ஈழத்தமிழர் உரிமைப் போரில் பங்கேற்று அதில் உயிர் தப்பிய போராளிகளின் போருக்கு பிந்திய அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு அமைந்தது என்பதை இப்படம் விளக்குகிறது. மேலும் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தற்போது தாயகம் திரும்பிய பின்னர், சாதாரண பொது மக்களில் ஒருவராய் வாழும் அன்றைய போராளிகளை எந்த மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதையும் உண்மையாக விளக்குகிறது. தற்போது இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு போராட்டக் குழுவை தமிழர்களிடையே உருவாகி விடக்கூடாது என்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதையும் இப்படம் விளக்குகிறது. ஈழ தமிழர்களைப் பற்றிய எந்தவித புரிதலும் இன்றி தமிழ்நாட்டில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றையெல்லாம் புறந்தள்ளும் விதமாக உண்மையை உண்மையாக உரைக்கும் திரைப்படமாக இப்படம் விளங்குகிறது. பல உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றிருப்பதே அதற்கு சான்றாகும்.
தற்போது அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்துள்ள இப்படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. அதாவது ஈழத் தமிழர்களை இயக்குனர் தரம் தாழ்த்தி இழிவுப்படுத்தியுள்ளதாக இப்படத்தை விரும்பாத எதிர்ப்பாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு படைப்பும் தான் விரும்பிய கருத்தினை மட்டும் சார்ந்து இருக்காது தம்மைப் பற்றியே சுயவிமர்சனமும் செய்து கொள்ளும் பாசாங்கற்ற நியாயமான படைப்பே உலகத்தரம் வாய்ந்த படைப்பாகும். இயக்குனரின் நேர்காணல் அதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. தமிழ்நாட்டில் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சை தேவையற்றது.
நன்றி வணக்கம்.
Post a Comment