"Goat"
தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் அமைத்தால் வியாபார ரீதியாக உதவும் என்ற நோக்கில் அமைத்துள்ளார்கள். இதன் மூலம் நாயகனின் தமிழ் சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் மொழிப் பற்றும் நன்றாக விளங்குகிறது.
கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர்களை போற்றும் விதமாக இந்த Goat என்ற அடைமொழி உலகப் பிரபலமானது. கால்பந்தாட்டத்தை விளையாடினால் ஏழு சதவிகிதம் நம் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் டென்னிஸ் விளையாட்டை தீவிரமாக விளையாடினால் பத்து சதவிகிதம் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். இம்மாதிரியான விளையாட்டுகளை விளையாடுபவர்கள் யாவரும் கடும் உடல் உழைப்பை முன்னிறுத்தி பல திறமையாளர்களின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிய பின்னரே இவ்வாறான கௌரவ பட்டம் வழங்கப்படுகிறது.
நீலச்சட்டை மாறன் கூறியது போல தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுத்ததைப் போல முன்னொரு காலத்தில் தமிழ் திரை உலகில் ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை தூசு தட்டி உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி நடிக்க வைத்திருப்பது Oldest of All Time என்ற பெயரே படத்திற்கு நெருக்கமான பெயராக இருக்கும்.
இயக்குனராக வெங்கட பிரபு வழக்கம் போல ஜெயித்திருக்கிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய கம்பீரத்தை விட்டுக் கொடுக்காது ஆங்காங்கே ஜொலிக்கிறார். இதுவே நாயகனின் கடைசி படம் என்று வருத்தப்படுபவோருக்கு இனி வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் அவரது நடிப்புப்பயணம் தொடரும் என்ற பேருவகையை அளித்திருப்பது நடிகர் விஜய்யின் வெற்றி அமைகிறது.
அந்த காலத்தில் பெரிய கமல் பிடிக்குமா குட்டி கமல் பிடிக்குமா என்று அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்த பிறகு கேட்கப்பட்ட கேள்விக்கு குட்டி கமல் என்று பதிலளித்த எனக்கு இப்படத்தைப் பார்த்த பிறகு பெரும் வியப்பு காத்திருந்தது. அதே கேள்வியை என் மகனிடம் கேட்ட பொழுது வந்த பதில் இது தான். "எனக்கு சஞ்சய் தான் பிடித்திருந்தது. அப்பா எல்லாம் ஓல்ட், சஞ்சய் தான் சூப்பர்".
வரலாறு தொடர்கிறது.
நன்றி வணக்கம்.
#பார்த்த_திரைப்படத்தில்_உணர்ந்தவை
Post a Comment