எம்ஜிஆர் பாடல்கள்
எம்ஜிஆர் என்ற ஆளுமையை கட்டமைத்தது பாடலாசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தனி மனிதராக அவர் எவ்வாறான குண நலன்களை பெற்றிருந்தாலும் சினிமா என்ற பொதுத்தளத்தில் பொதுவான நல்ல கருத்துக்களையே மக்கள் மனங்களில் விதைத்துள்ளார். எந்த ஒரு தருணத்திலும் தவறான முன்னோடியாக தான் இருந்து விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்துள்ளார். அவரது களங்கமில்லாத முனைப்பே காலம் கடந்தும் அவரது புகழை இன்று வரை மங்காது ஒளிரச் செய்கிறது. அரசியலுக்கு வர துடிக்கும் தமிழ் திரை கலைஞர்கள் தம்மிடம் இந்த நற்குணங்கள் இருக்கிறதா (அ) இருந்ததா என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு பொதுக்களத்தில் நடமாடினால் நல்லது.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளதாக பின்வரும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஏதோ ஒரு பாடலில் மட்டும் சொல்லி விட்டு சென்று விடாமல் பல பாடல்களில் மீண்டும் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியிருப்பது பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற உதவி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான பூமி என்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்.” (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா)
"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமோ?
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை"
“பொருள் கொண்ட பேர்கள்
மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி
பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில்
திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே
தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும்
சிரிப்பவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்
இறைவனும் தந்ததில்லை
புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக”
"நான் ஆணையிட்டால்" மாதிரியான கம்பீரமான, ஆண்மையான பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் வெளி வந்ததே கிடையாது என்று நினைக்கிறேன். எவ்வளவோ குத்து பாடல்கள் மற்றும் நாயக அறிமுக பாடல்கள் வெளிவந்திருந்தாலும் இந்தப் பாடலை மட்டும் இன்று வரையிலும் எந்த பாடலும் தோற்கடித்ததில்லை என்பது மட்டும் உண்மையான நிதர்சனம்.
யாருக்கும் தலைவணங்கி, அடிமையாக வாழ கூடாது என்ற கருத்தினையும் கொண்டிருந்தவராகவே தெரிகிறது. அதுவே பின் நாட்களில் அதிமுக தலைமையின் நாடித்துடிப்பாக மாறிப்போனது பல இன்னல்களில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காத்திருப்பதற்காகவே என்று நினைக்கிறேன்.
"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்"
என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான கவிஞர் வாலியே அதிமுக கட்சியினரின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தவர் என்ற பெருமை அடைகிறார்.
வளரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல் போதனைகள் வழங்கும் விதமாக பின்வரும் வரிகள் அமைகின்றன.
"தவறு என்பது
தவறி செய்வது
தப்பு என்பது
தெரிந்து செய்வது
தவறு செய்தவன்
திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன்
வருந்தி ஆகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி"
தமிழ் திரைப்பாடல் வரிகள் எவ்வளவோ உடைந்து தேய்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் அதை காக்கும் பொருட்டு பின்வரும் வரிகள் அமைகின்றன.
"விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும் (2)
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் (2)
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் (2)
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்"
"ஒய் திஸ் கொலவெறி" போன்ற பாடலை மிகப்பெரிய ஹிட் பாடலாக ஆக்கிய தமிழ் சமூகத்தினர் மேற்கூறிய பாடல் வரிகளை படித்து உணர்ந்தால் நல்லது. காலம் ஒரு சக்கரம் போன்றது. அன்றைய பாடல்கள் வரிகளுக்காகவே பெயர் பெற்றது. அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருக்கும் இன்று மீண்டும் வரிகளுக்காக சிறப்புறும் என்று எதிர்பார்ப்போமாக.
"எவ்வளவோ பாத்துட்டோம் இதை பண்ண மாட்டோமா?" என்கிற வசனத்தின் பாடல் வடிவம்தான் பின்வரும் வரிகள். இக்கட்டான சூழலில் பலர் நமக்கு தொல்லை கொடுத்தால் இந்த பாடலை பலமுறை கேட்டு தெளிவு பெறலாம்.
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"
"பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு (2)
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு" (2)
பின்வரும் வரிகள் எதற்காக நாம் உண்மையாக பயப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
"மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு (2)
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" (2)
எம்ஜிஆருக்கு தமிழ் திரையுலகம் அளித்த சலுகையை போன்று ரஜினிகாந்துக்கும் அளித்தது. பொது மக்களின் நெருக்கமான மனிதர்களான கூலித்தொழிலாளி, பால்காரன், கார் டிரைவர் போன்ற வேடங்களை ரஜினிகாந்துக்கு அளித்து அழகு பார்த்தது. எம்.ஜி.ஆருக்கும் ரஜினிகாந்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் முன்னவர் தன் அரசியல் கொள்கைகளை வலுவாக வகுத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களின் தன்மையை அமைத்துக் கொண்டார். பின்னவரோ எதற்காக தான் இந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தோம் என்பதை உணராமல் நடித்ததனால் எந்த ஒரு கொள்கை பிடிப்பும் இல்லாமல் அரசியல் கனவில் சுணங்கிப் போனார்.
தலைமுறை இடைவெளி என்று சொல்வார்கள். ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒரு முறை ஒரு தலைமுறையை கடந்து செல்கிறோம். தலைமுறை இடைவெளியில் சிக்கித் தவிக்கும் பல பேருக்கு பின்வரும் வரிகள் ஆறுதலாக அமைகிறது.
"பொய்யான
சிலபேர்க்கு
புது நாகரீகம்
புரியாத
பலபேர்க்கு
இது நாகரீகம்
முறையாக
வாழ்வோர்க்கு
எது நாகரீகம்
முன்னோர்கள்
சொன்னார்கள்
அது நாகரீகம்
முன்னோர்கள்
சொன்னார்கள்
அது நாகரீகம்
கண் போன
போக்கிலே
கால் போகலாமா
கால் போன
போக்கிலே
மனம்
போகலாமா? "
நன்றி வணக்கம்.
Post a Comment