உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 1
ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஒரு பெண்மணி இரு சிறுவர்களுடன் பயணிப்பதை கவனிக்கிறார். அப்போது அச்சிறுவர்களில் ஒருவன் தன் அம்மாவிடம் ஆர்வமாக ஏதோ ஒரு தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கையில் அந்த அம்மா கவலை தோய்ந்த முகத்தில் எந்த ஒரு முகக்குறியையும் காட்டாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கண்டு வியப்புற்று அதை அடிப்படையாகக் கொண்டு தனது முதல் திரைப்படத்தின் நாயகியின் கதாபாத்திரத்தை வடிவமைக்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகபாவனைகளையும் உணர்வுகளையும் கவனித்தாலே அதிலிருந்து பல நூறு கதைகளை உருவாக்கி விடலாம் என்கிற கருத்தை உடையவர் ஒருவரால் மட்டுமே உண்மை உணர்வுள்ள கதைகளை உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.
கதைச்சுருக்கம்
கிராமத்தில் இயங்கி வரும் ஓர் அரசு பள்ளியின் மேலாளராக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் வருபவரான விஜயன் வருகிறார். தனக்கு கீழ் பணி புரியும் எந்த ஒரு ஆசிரியர் மீதும் மதிப்பும் மரியாதையும் அற்று சர்வாதிகார ஆட்சி செய்து வருகையில் புதிதாக ஒரு ஆசிரியர் கிராமத்திற்கு வருகிறார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு கிடைத்தாலும் பல கிராமங்களில் வெள்ளையனின் அடக்குமுறை ஆட்சியை இன்றும் ஏதோ ஒரு இந்தியன் மறக்காமல் பின்பற்றி வருவது கிராமங்களில் உள்ள பல்வேறு சாபக்கேடுகளில் ஒன்றாகும் என்கிற வசனம் அந்த ஊரில் நிலவிவந்த முன் கதைச் சுருக்கத்தை தெளிவாக உரைக்கிறது.
தொடர்ந்து, அரசுப்பள்ளி மேலாளரின் குடும்பப் பின்னணிக்குள் திரைப்படம் விரிகிறது. அவருக்கு ஒரு மனைவியும் மகனும் கைக்குழந்தையான மகளும் உள்ளனர். நோயாளியான மனைவிக்கு ஒரு தங்கையும் ஊரில் பெரும்பாலான நபர்களிடம் கடன்களைப் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கித் தவிக்கும் தந்தையும் உள்ளனர்.
மேலாளர் தான் நினைப்பதே சரி என்று நினைக்கும் குணம் கொண்டவர். இம்மாதிரியான ஆட்களிடம் கவனமாக பழக வேண்டும். வன்மையான பல குணங்கள் அவர்களிடம் நிறைந்திருந்தாலும் அவ்வப்போது சில நல்ல குணங்களும் வெளிப்படும். அதைப் பற்றிக் கொண்டே நாம் அவர்கள் போக்கில் சென்று அவர்களிடம் பழகுவதே நம் மரியாதைக்கு சிறப்பு சேர்க்கும். அவ்வாறே ஊர் மக்களும் அவரது குடும்பத்தினரும் மிகவும் கவனமாக அவரிடம் பழகுகின்றனர்.
ஆணாதிக்கத்தில் ஊறி திளைத்தவரான மேலாளருக்கு மனைவியின் தங்கையின் மீது விருப்பம் உள்ளது. சீக்கிரமே தன் மனைவி இறந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் தங்கையை இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறார். அதை தன் மனைவியிடமும் மாமனாரிடமும் தெரிவிக்கிறார். அதற்கு அவர்கள் உடன்படாததால் வெளியூரில் உள்ள ஓர் பணக்கார வீட்டு பெண்ணை மனைவி இறந்த பின் தன் தாயின் தூண்டுதலின் பேரில் மறுமணம் செய்து கொள்கிறார்.
இதன் விளைவாக, தங்கையின் வாழ்க்கையில் எந்த ஒரு இடையூறும் மேலாளர் விளைவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கை உருவானதால் ஊருக்கு புதிதாக வந்த பள்ளி ஆசிரியரை திருமணம் செய்ய தங்கை ஒப்புக் கொள்கிறார். அதேசமயம் தனது அக்காவின் குழந்தைகளை தம்முடனே வளர்க்கவும் திட்டமிடுகிறார். மேலும் புது மாப்பிள்ளையும் மேலாளரின் கீழ் பணி செய்ய விரும்பாததால் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்ததோடு மேலாளர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக தமிழக அரசுக்கு கடிதம் மூலம் மேலாளர் அது வரை செய்து வந்த ஊழலை சுட்டிக்காட்டி அவர் மீதான நடவடிக்கை எடுக்க போதுமான செயல் திட்டத்தை வகுத்த தகவலை திருமண பத்திரிக்கை கொடுக்கும் வேளையில் தெரிவிக்கிறார்.
என்னதான் மேலாளருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று இருந்தாலும் முதல் மனைவியின் தங்கையின் மீதுள்ள விருப்பம் இன்னும் அடங்கவில்லை. மேலும் தனது குழந்தைகளும் தன்னை விட்டு பிரிவதை விரும்பவில்லை. புது மாப்பிள்ளையின் மிரட்டலுக்கு பயந்து தனக்கு கிடைக்காவிட்டாலும் வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் மைத்துனியை மானபங்கம் செய்து விடுகிறார். இதைக் கண்ட இரண்டாவது மனைவியும் அவரை வெறுத்து விடுகிறார்.
தகவல் அறிந்த ஊர் மக்கள் அவரை கொல்ல முற்றுகையிடுகின்றனர். இறுதியில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
தந்தையையும் தாயையும் இழந்த குழந்தைகள் குடும்பம் என்கிற கதம்பத்தில் மிஞ்சி இருக்கும் உதிரிப் பூக்களாக நிற்பதோடு திரைப்படம் நிறைவடைகிறது.
Post a Comment