உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 2
1. முதல் மனைவியை நோயாளி என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு காட்சியில் கூட ஏதோ ஒரு நோய் தாக்கியதைப் போல் இருமலோ காய்ச்சலோ இன்றி முழு மேக்கப்புடன் அமைதியே உருவான திடகாத்திரமான பெண்ணாக வலம் வருகிறார். இறுதியில் இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் படுத்த படுக்கையாகி இறந்து போவதாக காட்சிப்படுத்தியிருப்பது அவரது ஆரோக்கியத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.
2. வீட்டில் தண்டசோறு சாப்பிடும் வழக்கம் ஆண்களுக்கே உரிய பழக்கம் என்று கூறி பழக்கப்பட்ட சமூகத்தில் முதல் மனைவியின் தங்கை ஊரில் எந்த ஒரு வேலையும் செய்யாது அக்காவின் கணவர் சம்பளத்தில் அவர் வீட்டில் இல்லாத போது தண்டசோறு சாப்பிடும் படியான காட்சி அமைப்பு புதிதாக இருந்தது.
3. அரசுப்பள்ளி மேலாளர் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் ஏன் அவ்வாறான வன்குணத்தை பெற்றிருந்தார் என்பதற்கான காரண காரியங்களை விளக்காமல் விட்டிருப்பது குறையாக பார்க்கிறேன். ஓரிரு காட்சியில் அவரது பெற்றோர்களின் குடும்பப் பின்னணியையும் வளர்ப்பு முறையையும் விளக்கி இருந்தால் அவரது கதாபாத்திரத்திற்கு மேலும் பலத்தை சேர்த்திருக்கும்.
4. தங்கையை திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை மேலாளருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் காட்சியில் ஊரில் உள்ள பிராமணன் மற்றும் முடி திருத்தம் செய்யும் நாவிதன் போன்றோர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி கூறிய பிறகு மேலாளரின் பெயரை கடைசியாக சொல்லி கொடுப்பது மேலாளர் மீது எந்த அளவிற்கு வெறுப்பை வைத்திருந்தார் என்பதை பார்வையாளனுக்கு கடத்தும் வகையில் இயக்குனர் செய்திருப்பது சிறப்பு.
5. இறுதிக் காட்சியில் மேலாளர் ஆற்றில் விழுந்து இறந்து போவதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நேரடியாக காட்சிப்படுத்தாமல் ஊர் மக்களின் உணர்வு போராட்டத்தை மட்டுமே காட்டி இயக்குனர் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
6. முதல் மனைவியான அக்கா இறந்த பின் குழந்தைகளை சரியான முறையில் கவனிக்காததால் மேலாளரை கண்டிப்பதற்காக தங்கை வருகிறார். அக்காட்சியில் தங்கையின் வசைச்சொற்கள் பின்னணியில் ஒலிக்க ஊர் மக்கள் அவரை கைகூப்பி வணங்குவது போன்று காட்சிப்படுத்தியிருப்பது குடும்பத்திற்குள் எவ்வளவு இழிவாக அவரை நடத்தினாலும் ஊரில் அவருக்குரிய மரியாதை கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது என்கிற நகைமுரனை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. இயக்குனர் வேண்டுமென்றே இப்படி செய்யாவிட்டாலும் திரைப்படத்தின் எடிட்டர் என்கிற முறையில் பி.லெனின் அவர்களின் திறமையான பணி வியக்க வைக்கிறது.
7. ஒவ்வொரு நாள் காலையிலும் கதிரவனை கண்ட மகிழ்ச்சியில் பூக்கள் மலர்கின்றன. நறுமணத்தையும் அழகையும் பிறருக்கு அளித்து தம்மை சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்தளித்து தனது ஒரு நாளை பெரும் ஆரவாரத்துடன் அவை கடக்கின்றன. மாலையில் வாடி வதங்கி இறந்து போகையில் எந்த ஒரு துயரமும் துக்கமுமின்றி இறக்கின்றன. தினந்தோறும் பூக்கள் ஓர் வாழ்க்கைப்பாடத்தை மனிதர்களுக்கு நடத்திக் கொண்டே இருக்கிறது. மனிதர்களாகிய நாம் தான் அதை கவனிக்காமல் கடந்து செல்கின்றோம். பூக்களைப் போன்று நாமும் நம் வாழ்நாளை மகிழ்ச்சியோடு கழித்து பெருமாராவாரத்துடன் நாம் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்து இறக்கும் தருவாயில் எந்த ஒரு குற்றங்குறையுமின்றி இறந்து போக வேண்டும் என்கிற செய்தியே மனிதர்களாகிய நாம் பூக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்படத்தின் வாயிலாக இயக்குனர் தெரிவிப்பதாக புரிந்து கொள்கிறேன்.
Post a Comment