Sunday, December 04, 2016


CUBA and Fidel Castro

==========================

அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ.

யாருக்கும் இல்லாத ஒரு பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர்

History of CUBA

================

கடந்த 1492-ல்தான் கொலம்பஸ் கியூபாவைக் கண்டுபிடித்தார். பின்னர் (வழக்கம்போல!) அது ஸ்பெயினுக்குச் சொந்தம் என்றார்

சுமார் நானூறு வருடங்கள் கியூபாவை ஸ்பெயின் ஆண்டது. அவ்வப்போது புரட்சிகள் ‘மினி’ சைஸில் வெடிப்பதும், தன் ‘மாக்ஸி’ படைகளைக் கொண்டு அவற்றை ஸ்பெயின் அடக்குவதும் வாடிக்கையானது.

குடியேறியவர்களில் பெரும்பாலான வர்கள் தேர்ந்தெடுத்தது விவசாயத்தை. கரும்பு, புகையிலை ஆகியவை அங்கு அமோகமாக விளைந்தன. நாளடைவில் அங்கு நிறைய பருத்தி மில்கள் செயல்படத் தொடங்கின.

விரைவிலேயே கியூபா பணக்கார நாடானது. ‘அமெரிக்கன் இண்டியன்ஸ்’ எனப்படும் உள்ளூர்வாசிகள் மட்டுமே வேலைக்காக அமர்த்தப்பட்டனர். குறை வான கூலி, மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் காரணமாக நாள டைவில் இவர்களின் எண்ணிக்கை சுருங்கிப் போனது. மாற்று ஏற்பாடாக, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்து, அவர்களின் உழைப்பில் கொழிக்கத் தொடங்கினார்கள், கியூபாவில் குடிபுகுந்த ஸ்பானிஷ்காரர்கள்.

Intro of AMERICA

==============

1898-ல் ஹவானா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் ஒன்று வெடித்தது. கியூபாவிலுள்ள தங்கள் நாட்டுக்காரர்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பிய ராணுவக் கப்பல் இது. மர்மமான முறையில் அந்தக் கப்பல் வெடித்துச் சிதறியதில் 275 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.

வெடித்த கப்பலின் பெயர் MAINE. எதனால் வெடித்தது? இன்றுவரை தெரியவில்லை. என்றாலும் அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் பிரகடனம் வெளி யிட்டது. ஆக ஸ்பானிய - அமெரிக்கப் போர் தொடங்கியது. (கியூபாவை அப்போது ஆட்சி செய்தது ஸ்பெயின்தானே).

ஸ்பெயின் ராணுவம் சரணடைந்தது. ‘பாரிஸ் ஒப்பந்தம்’ இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. கியூபா மீது தான் கொண்டிருந்த சகல உரிமைகளையும் விட்டுத் தந்தது ஸ்பெயின்.

Rise of பாதிஸ்தா ஜல்திபார்

================================

கியூபாவில் தனது ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா. சில வருடங்கள் தான். கியூபாவாசிகள் ஸ்பெயினுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக் காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்கா பணிந்தது. கியூபா தன்னைத் தானே ஆளட்டும் என்று விட்டுக் கொடுத்தது.

ஆனால் ’கியூபாவிலுள்ள காண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக் குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்’ என்பது போன்ற நிபந் தனைகளை விதித்தது. அன்றைய அவசரத் துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது.

படிஸ்டா என்பவர் சுதந்திர கியூபாவின் அதிபரானார். தான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்பித்த போது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.

Intro on Castro

=======================

1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.

படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர்.

1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.

ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் 'The Union Insurreccional Revolucionaria'

எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.

கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது.

Revolt against ரஃபேல் ட்ரூஜில்லோ of Dominican Republic and Columbian rulers.

ஆர்டொடாக்ஸோ கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார் பிடல் காஸ்ட்ரோ. அந்தக் கட்சியின் தலைவராக இருந்த எடுவார்டோ சிபாஸ் என்பவரை பிடல் காஸ்ட்ரோவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.

Marriage Life

======================

1948-ல் பிடல் காஸ்ட்ரோ, தன் சக மாணவியான மிர்டா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தினால் பிடல் காஸ்ட்ரோவுக்குச் செல்வச் செழிப்பான வாழ்க்கை கிடைத்தது. அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் ஆக முயன்றார் பிடல் காஸ்ட்ரோ.

1949-ல் அவருக்கு ஒரு மகனும் (Diaz Balart) பிறந்தான்

1952ல் அங்கு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அரசை ராணுவத் தலைவர் படிஸ்டா கைப்பற்றியதால் பொதுத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

1953ல் இவரும் இவர் சகோதரர் ரால் காஸ்ட்ரோவும் இணைந்து படிஸ்டா அரசின்மீது தாக்குதல் நடத்த, கிடைத்தது ஆட்சி அல்ல. 15 வருட சிறை தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மெக்ஸிகோவுக்கு தப்பிச் சென்றார் பிடல் காஸ்ட்ரோ. அங்கு அர்ஜென்டினாவைச் சேர்ந்த மார்க்ஸியத் தலைவர் சே குவாராவின் நட்பும், ஆதரவும் கிடைத்தது.

1955-ல் திருமண பந்தம் முடிவடைந்து விட்டது.

SON

==========

பிடல் காஸ்ட்ரோ மகன் (Diaz Balart) கியூபாவின் அரசியலில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டயஸ் பலார்ட் (Diaz Balart) அறிவியலில் சிறந்து விளங்கினார்.

மாஸ்கோவில் மேற்படிப்பு படித்தபோது தன் பெயரை ஜோஸ் ரால் ஃபெர்ணான்டஸ் என்ற புனைப்பெயரில்தான் படிப்பைத் தொடர்ந்தார். ‘காஸ்ட்ரோ’என்ற பெயர் தனக்குத் தேவையில்லாத கவனத்தையும், சங்கடங்களையும் அளிக்கும் என்ற சந்தேகம்தான் காரணம்.

‘உங்களுக்கு அரசியல் ஆசை உண்டா, இல்லையா?’’ என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன் அளித்த பதில் இதுதான். ‘‘ஒருவேளை என் அடுத்த பிறவியில் அரசியல் ஆசை வரக்கூடும். இப்போதைக்கு விஞ்ஞானியாக இருப்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

'ஜூலை 26 இயக்கம்’

=================================

‘ஜூலை 26 இயக்கம்’ என்பது பிடல் காஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டா பதவியிலிருந்து இறக்கு வதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே.

சாண்டியாகோ நகரில் இருந்த அரசின் ராணுவப் பகுதியின்மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்குதலை நடத்தியது ஜூலை 26, 1953 அன்று. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்து விட்டது.

மெக்ஸிகோவிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. படிஸ்டாவின் ஆட்சியை நீக்குவதற்காக கட்டுப்பாடு நிறைந்த கெரில்லா படையாக இது மாறியது.

படகுகளின் மூலமாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்கத்தினர் கியூபாவை அடைந்தனர் இந்த இயக்கத்தைச் சேர்ந்த 82 பேர்.

சியெரா மாஸ்ட்ரா என்பது கியூபாவின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர். இதைத்தான் தங்களது முக்கிய களமாகத் தேர்ந்தெடுத்தனர் பிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும். இந்த மலைப் பகுதியில் மறைந்தபடிதான் படிஸ்டாவின் ராணுவ வீரர்கள்மீது சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

இயக்கத்தின் போட்டியற்ற சிங்கிள் தலைவரானார் பிடல் காஸ்ட்ரோ.

படிஸ்டாவுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு சரிந்து கொண்டிருந்தது. அவரது கடும் தகவல் தணிக்கைமுறை மற்றும் பிடிக்காதவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் போக்கு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்கள். இதை அறிந்த அமெரிக்கா படிஸ்டா ஆட்சிக்குத் தாங்கள் அளித்து வந்த ஆயுத உதவிகளை நிறுத்திக் கொண்டது

1958ல் பிடல் காஸ்ட்ரோவின் இயக்கம் வலிமை பெற்றது. வேறுவழியின்றி ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கியது.

1959 ஆண்டின் தொடக்கத்தில் படிஸ் டாவின் அரசு முழுவதுமாக நீக்கப்பட்டது.

தாற்காலிக அதிபராக மேனுவல் உருஷியா என்பவரை நியமித்தார். பிடல் காஸ்ட்ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம்.

புரட்சியை அடக்கும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை படிஸ்டா அரசு கொன்று குவித்திருந்தது. இதற்குக் காரணமானவர்களை காஸ்ட்ரோ தண்டிக்கத் தொடங்கினார். வழக்குகள் நடைபெற்றன. அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன. உள்ளூரில் இதற்கு பலத்த ஆதரவு. ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இந்த வழிமுறையை ஏற்கவில்லை.

“நாங்கள் என்ன அப்பாவி மக்க ளையா தண்டிக்கிறோம்? அரசியல் எதிரிகளையா பழிவாங்குகிறோம்? கொலைகாரர்களைக் கொல்கிறோம், அவ்வளவுதானே’’ என்று வெளிப் படையாகவே கூறினார் பிடல் காஸ்ட்ரோ.

1965ல் 'ஜூலை 26 இயக்கம்’ , ‘கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று பெயரை மாற்றிக் கொண்டது.

கியூபா நிகழ்த்திய மருத்துவப் புரட்சி

===============================================

அடிப்படையில் மருத்துவரான சே குவேரா அர்ஜெண்டினாவில் பிறந்தவராக இருந்தாலும், கியூபாவின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் மருத்துவத் துறை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டபோது, சேகுவேராவின் வயது 30 தான்.

சர்க்கரை ஏற்றுமதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, ராணுவம் மற்றும் உடல் ஆரோக்கியத் துறைகளுக்குச் செலவழித்தது கியூபா. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த சில பள்ளிகளும், மருத்துவமனைகளும் கியூபாவில் உருவாயின.

புதிய மருத்துவ அமைப்பைக் கட்டமைப்பதற்கு கியூபாவுக்கு இருந்த திறன் என்பது 1959 புரட்சிக்குப் பிந்தைய ஒரு சில பத்தாண்டுகளுக்குள்தான் உருவாக்கப்பட்டது

மருத்துவர்களை ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தனர்.

ஒரு பிரிவு மருத்துவர்கள் கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையைச் செய்வது முதன்மை பணி. அதேநேரம் தேவைப்படும்போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த மருத்துவப் பிரிவு `அமைதிப்படை’, `மருத்துவப் புரட்சி படை’ என்று அழைக்கப்பட்டது

இரண்டாவது மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், இதர நாடுகளின் ஆரம்பச் சுகாதாரச் சேவை அமைப்பை (Primary health care system) வளர்த்தெடுக்க அந்நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்குத் தங்க வேண்டும். அந்த நாட்டு மருத்துவர்களோடு இணைந்து மருத்துவச் சேவையை மேற்கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கியூப மருத்துவர்கள், அவர்களுக்குப் பதிலாகச் செல்வார்கள்.

1961-2008-க்கு இடைப்பட்ட காலத்தில் 1,85,000 மருத்துவ நிபுணர்களை உலகின் 103 நாடுகளில் சேவை செய்யக் கியூபா அனுப்பியுள்ளது.

இலவச மருத்துவக் கல்வியும் மருத்துவச் சேவைகளும் `ஒருமைப்பாட்டுக்கான ஆயுதங்களாக’ காஸ்ட்ரோவால் முன்னிறுத்தப்பட்டன. இப்படிச் செய்வது சுயநலத்துக்கு எதிரான ஒருமைப்பாட்டை உருவாக்கும் போராகத் திகழும் என்று அவர் வரையறுத்தார்

காஸ்ட்ரோவின் ஆட்சிக்கு முன்பு 1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே இருந்தது. அதே 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருந்தனர். அதேநேரம் 2009-ல் மேற்கு ஐரோப்பாவில் மக்கள்: மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியைப் போலவே, மருந்துகளின் விலையை ஃபிடெல் காஸ்ட்ரோ முதலில் குறைத்தார். பின்பு படிப்படியாக அவற்றை முற்றிலும் இலவசமாக மாற்றினார்.

உலகில் முதன்முதலாக மக்களின் குடிசைகளில் மருத்துவர்கள் கியூபாவில் வாழ்ந்தனர். கிராமச் சமுதாயங்களுடனும் குடும்பங்களுடனும் அவர்கள் ஒன்றாக இணைந்தனர். வீடுகளுக்கே சென்று மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றினர்

.

1970-ம் ஆண்டில் கல்வித் துறைக்குப் பதிலாக மருத்துவக் கல்வியைக் கையாளும் பணி, மக்கள் நலவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

மருத்துவத்தில் கியூபா நிகழ்த்திய புரட்சியை வேறு எந்த நாடும் செய்யவில்லை என்பது உலக மருத்துவத் துறையைக் கவனித்துவரும் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

Cuba vs America

========================

கியூபாவில் இருந்த அமெரிக்கர் களுக்குச் சொந்தமான கரும்பு வயல்களை காஸ்ட்ரோ தேசியமயமாக்கியதில்தான் முதல் பெரிய பிளவு தொடங்கியது.

1961 ஏப்ரலில் அமெரிக்க உளவுத்து றையான சி.ஐ.ஏ.வினால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் கியூபாவைத் தாக்கினார்கள். மூன்றே நாட்களில் கியூபா ராணுவம் இவர்களை அடக்கி விட்டது. இந்த அடக்குமுறைக்கு கியூபாவின் அப்போதைய பிரதமரான பிடல் காஸ்ட்ரோ நேரடிப் பொறுப்பேற்றார்.

அமெரிக்க உளவுத் துறையின் மூலம் அமெரிக்க அதிபர் ஜசன்ஹோவர், பிடல் காஸ்ட்ரோவை ஆட்சியிலிருந்து இறக்க பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

1960-ல் ஜான் கென்னடி அங்கு அதிபர் ஆனார். இவரும் கியூபா முற்றுகைக்கு தனது சம்மதத்தை அளித்தார்.

கியூபாவின் விமான தளங்களை தாக்கத் தொடங்கியது அமெரிக்கா. அது மட்டுமல்ல, அடுத்த சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் கியூபாவுக்கு ராணுவ உதவி செய்வதையும் தடுத்துவிட்டது யு.எஸ்!.

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமான விரோதம் அதிகமானது. காஸ்ட்ரோவின் அரசு, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.

கோபத்தின் உச்சிக்கே போன யு.எஸ். கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டது. உடனே, கியூபாவிலுள்ள அத்தனை வியாபாரங்களையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறிவித்தார் காஸ்ட்ரோ.

கியூபாவுடனான தனது தூதரகத் தொடர்புகளை அறுத்துக் கொண்டது யு.எஸ்.

Support of Soviet Union

=================================

அமெரிக்க எதிர்ப்பு, பெரும் பாலான ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பின்மை இரண்டையும் கியூபாவால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடிந்ததென்றால் அதற்கு முக்கிய காரணம், சோவியத் யூனியன். மார்க்கெட் விலையைவிட அதிக விலை கொடுத்து கியூபாவிடமிருந்து சர்க்கரையை வாங்கிக் கொண்டது அது. தன்னைப் போலவே கம்யூனிஸ்ட் ஆட்சி நாடு என்பதோடு அமெரிக்காவின் நேரடி எதிரி என்ற பாசம் வேறு. தவிர தடையில்லாத ராணுவ உதவிகளையும் செய்தது சோவியத் யூனியன்.தனது இந்த நண்பனிடம் மற்றொரு உதவியையும் கேட்டுப் பெற்றது கியூபா. - அதுதான் சக்திவாய்ந்த ஏவுகணைகள். யு.எஸ். நடுங்கிவிட்டது. ‘உடனடியாக கியூபாவிடமிருந்து ஏவுகணைகளை சோவியத் யூனியன் திரும்பப் பெறாவிட்டால், போர்தான்’ என்றது. சோவியத் மெளனம் காக்க, சில நாட்கள் உலகமே பதட்ட நிலையில் ஆழ்ந்தது - வல்லரசுகளுக்கிடையே அணு ஆயுதப் போர் நடந்துவிடுமோ என்று!

கடைசியில், சோவியத் தனது ஏவுகணைகளைக் கியூபாவிடமிருந்து திரும்பப் பெற்றது. என்றாலும், பல்லாயிரக்கணக்கான தனது ராணுவ வீரர்களை கியூபாவிலேயே தங்க வைத்தது.

மனித உரிமை மீறல்

=============================

கியூபாவில் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசைப் பற்றியோ, பிடல் காஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்களில் விமர்சனம் செய்தால் கைதும், தண்டனையும் நிச்சயம் உண்டு என்ற நிலை இருந்தது. தங்கள் பேச்சுரிமை பறிக்கப்படுவதை விரும்பாத பலரும் அமெரிக்காவுக்குச் சென்றார்கள்.

ரால் காஸ்ட்ரோ 2008 பிப்ரவரியில் அதிபராக பொறுப்பேற்றபோது தனது முதல் உரையிலேயே கியூபா மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளில் சில (முக்கியமாக பேச்சுரிமை) தளர்த்தப்படும் என்றார்.

மனித உரிமைகளை கியூபா அரசு அடிக்கடி மீறுகிறது என்ற குற்றச்சாட்டை பல அமைப்புகள் நீண்டகாலமாக முன்னிறுத்துகின்றன. “எந்த வகையான அரசியல் எதிர்ப்பையும் கியூபா அரசு சகித்துக் கொள்வதே இல்லை’’ என்ற எண்ணம் பரவலாகி வருகிறது. ஐரோப்பிய யூனியன் இது தொடர்பாக ஓர் எச்சரிக்கையை விடுத்தது. பதிலுக்கு கியூபா “எங்கள்மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடை கூட மனித உரிமை மீறல்தான்’’என்கிறது.

உலகெங்கும் எடுத்த கணக்கெடுப்பின்படி (சீனாவுக்கு அடுத்ததாக) மிக அதிக அளவில் பத்திரிகையாளர்களைக் கைது செய்த அரசு கியூபாதான்.

தென்னாப்ரிக்க ராணுவம் அங்குள்ள கருப்பு மக்களை எதிராகத் தாக்குதல் நடத்தியபோது, கியூபாவின் ராணுவம் கருப்பு மக்களை ஆதரித்தது.

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராக 1959 முதல் 1976 வரையிலும், அதிபராக 1976 முதல் 2008 வரையிலும் பதவி வகித்தவர். 1991-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவரது தலைமைச் சிறப்பை கேள்விக் குறியாக்கியது.

Breakdown of Soviet Union

======================

1991ல் சோவியத் யூனியன் உடைந்தது. கியூபாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் சோவியத் யூனியனுக்குதான். இந்த நிலையில் ஏற்றுமதியால் கிடைத்துவந்த நிதி கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சோவியத் யூனியன் கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை நீக்கிக் கொண்டதோடு ராணுவத்தையும் கியூபாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.

போதாக்குறைக்கு அமெரிக்கா சமயம் பார்த்து தனது பொருளாதாரத் தடைகளை கியூபாவின் மீது விதித்தது. காஸ்ட்ரோ பதவி இறங்கினால்தான் தடைகளை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது அமெரிக்கா. 1990-களில் கியூபா மிக ஏழ்மையான நாடாகியது.

Cuba at 90's

======================

கியூபாவின் பொருளாதாரம் மெள்ள மெள்ள மேலும் வீழ்ச்சி கண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கடல்வழியாக அமெரிக்காவுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்கினர்.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா என முயற்சி செய்தது கியூபா. இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது.

ஆனால் சுற்றுலாப் பயணிகளின் மூலம் வந்த நிதி போதுமானதாக இல்லை.

‘ஏழைகளின் சொர்க்க பூமியாக’ விளங்கிய கியூபா பெரும் சிக்கலில் திணறத் தொடங்கியது. அரசு அளிக்கும் ரேஷன் பொருட்களை வாங்க மூச்சு முட்டும் கூட்டத்தில் தினந்தோறும் நின்று வாங்கிக் கொண்டு, தள்ளாடியபடி திரும்பினர்.

பல குடும்பங்கள் தங்கள் ஷூக்கள், அலமாரிகள் போன்றவற்றை எல்லாம்கூட விற்று குச்சிக்கிழங்கு வாங்கித் தின்ற உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளத் தொடங்கினர்.

‘என்ன செய்ய? எல்லாவற்றையும் அவர் கண்ட்ரோல் செய்கிறார்’’ என்று சொல்லி தாடியை உருவுவதுபோல சைகையிலேயே காஸ்ட்ரோவை மனத்தாங்கலுடன் குற்றம் சாட்டத் தொடங்கினர் மக்கள்

தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இயந்திரங்களை இயக்க வைக்க எரிபொருள் இல்லை. வாங்கவோ, சரியாக விநியோகிக்கவோ வழியில்லாமல் விளைந்த பயிர்கள் எல்லாம் வயல்களிலேயே வாடத் தொடங்கின.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காஸ்ட்ரோ ஒரு முக்கியக் காரணம் என்ற கடும் விமர்சனத்தை முன்வைத்தாலும் அந்தச் சரிவிலிருந்து கியூபாவைக் கடைத்தேற்றவும் அவர் ஒருவரால்தான் முடியும் என்று மக்கள் நம்பினார்கள்.

Recovery of Cuba

===============

பிடல் காஸ்ட்ரோ நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்கினார்.

ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் கியூபாவில் ஓட்டல்கள் கட்ட அனுமதி அளித்தார்.

கனடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சில கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட்டார்.

முதல் முறையாக அங்கு வருமானவரி அறிமுகமானது.

ரஷ்யாவுக்குப் பிறகு கியூபாவுக்கு ஆதரவான நாடுகளாக சீனா, வெனிசுவேலா, பொலிவியா ஆகியவை ஓரளவு விளங்கின. முக்கியமாக வெனிசுவேலாவும், பொலிவியாவும் பெட்ரோல் விஷயத்தில் கியூபாவுக்குக் கை கொடுத்தன.

அண்ணாந்து பார்க்க வைக்கும் கியூப இயற்கை வேளாண்மை!!

========================================================================

1989-ல் சோவியத் சிதறிய நிலையில், அதற்கான மாற்றுத் திட்டங்களை முழுமூச்சுடன் செயல்படுத்த முனைப்புடன் இறங்கியது கியூப அரசு.

உடனடி தீர்வுக்கான வழிகளாக, அவர்கள் மேற்கொண்ட முறைகள் அனைத்தும் வியப்பளிப்பவை.

எங்கெல்லாம் வெற்றிடங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் மட்கு எரு (கம்போஸ்ட்), வளமான மண் இட்டு நிரப்பப்பட்டுப் பயிர்த்தொழில் மேற்கொள்ளப்பட்டது. தெருக்களின் நடைபாதைகள் உட்பட எதுவும் அதற்கு விலக்கு இல்லை என்ற நிலை உருவானது.

கியூபாவில் 3,83,000 நகர்ப்புறப் பண்ணைகள், பயன்படுத்தப்படாமல் இருந்த 50,000 ஹெக்டேர் நிலங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன.இப்பண்ணைகள் ஆண்டுக்கு 15 லட்சம் டன்களுக்கும் மேற்பட்ட காய்கறிகளை உற்பத்தி செய்கின்றன.

ரசாயன உரங்களுக்கு மாற்றாகப் பசுந்தாள் உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாகச் சுயமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனப் பயன்பாட்டு சதவீதம் பெருமளவு குறைந்தது.

அனைத்துக் கழிவுகளும், ஆம்…. மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், வீணாகும் குப்பை போன்றவை மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாக மாற்றப்பட்டு வயல்களில் தூவப்பட்டன. அதேபோல, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டுக் கரும்புத் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சப்பட்டது.

கரும்புச் சக்கையை எரித்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அது சர்க்கரை ஆலைகளில் பயன்பட்டது. இவ்வாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தாத வகையில் கழிவுப்பொருட்கள் அனைத்துமே, மறுசுழற்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டதில் கியூபா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டது.

லத்தீன் அமெரிக்காவைப் பொறுத்தவரை வேளாண் சூழலியல் என்பது நவீனத் தொழிற்சாலை பாணி விவசாயத்துக்கு நேரெதிராக வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பண்ணைய அணுகுமுறையையே கொண்டிருந்தது

இன்றைக்கு கியூபாவின் சிறு விவசாயிகள் நாட்டிலுள்ள வேளாண் நிலங்களில் 25 சதவீதத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால், 65 சதவீத உணவு தானிய உற்பத்தியின் வழியாகத் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அவர்களே பெரும் பங்கைச் செலுத்துகிறார்கள்.

கியூபாவில் உள்ள 1.1 கோடி மக்கள்தொகைக்கும் இயற்கை வேளாண் முறையில் உணவளிக்கப் போதுமான ஆற்றல், அந்நாட்டு விவசாயிகளிடம் உள்ளது.

இத்தனைக்கும் இன்னமும் பயிர் செய்யப்படாமல் இருக்கும் சமவெளி நிலங்களின் அளவு 60 லட்சம் ஹெக்டேர்.

மேலும் 10 லட்சம் ஹெக்டேர் மென்சரிவு நிலங்களும் பயிரிடப்படாத வெற்றிடங்களும் எதிர்காலத் தேவைக்கு இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

கியூபாவின் சுற்றுச்சூழல்: 1992 - ரியோவில் நடைபெற்ற பூமி மாநாடு

=============================================================================

1992-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோவில் நடைபெற்ற பூமி மாநாடு. அந்த மாநாட்டில் மறைந்த கியூப முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒன்று.

“உலகில் காடுகள் நிர்மூலமாகி வருகின்றன. பாலைவனங்கள் பரவலாகி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான டன் வளம்மிக்க மேல்மண் வீணாகக் கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கணக்கற்ற காட்டுயிர்கள் இந்த உலகிலிருந்து அற்றுப்போய்விட்டன. மக்கள்தொகை அதிகரிப்பால் உருவாகும் நெருக்கடியும், வறுமையும் பிழைத்திருப்பதற்கான செயல்பாடுகளைத் தீவிரமடைய வைத்துள்ளன. அதேநேரம், சுற்றுச்சூழலை அழிக்கும் நடவடிக்கைகளிலேயே இவை பெரும்பாலும் முடிவடைகின்றன.

இந்தச் சீரழிவுக்கு மூன்றாம் உலக நாடுகளைக் குற்றஞ்சாட்ட முடியாது. சமமற்ற வர்த்தகம், பணக்கார நாடுகள் உள்நாட்டு வளங்களைப் பாதுகாத்துக்கொள்வது, மூன்றாம் உலக நாடுகள் வைத்துள்ள பெருமளவு கடன் போன்றவை சூழலியல் மீது தாக்குதல் தொடுக்கவும், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் செய்கின்றன. இந்தச் சுயஅழிப்பிலிருந்து மனிதக் குலத்தைக் காக்க வேண்டுமென்று நாம் விரும்பினால், உலகில் தற்போது கிடைக்கும் வளங்களையும் தொழில்நுட்பத்தையும் மேம்பட்ட வகையில் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது” என்பதே ரியோ பூமி மாநாட்டில் காஸ்ட்ரோ பேசியதன் சாரம்.

"சுயநலம் அழியட்டும். ஆதிக்கம் அழியட்டும். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்மை, பொறுப்பற்ற தன்மை, வஞ்சகம் போன்றவை அழியட்டும். நாளை சரி செய்துகொள்ளலாம் என்று நாம் ஒத்தி வைப்பது மிகுந்த தாமதம் ஆகிவிடும். இந்த மாற்றத்தை நீண்ட காலத்துக்கு முன்பே நாம் தொடங்கியிருக்க வேண்டும்."

புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் தொடர்பான பெரிய விவாதமோ, அறிவியல் ஆதாரமோ கண்டறியப்பட்டிருக்காத நிலையில், அவர் நிகழ்த்திய உரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Quotes of Castro

==========================

“இயற்கையை அழிக்காமலும், அடிப்படை மனித மதிப்பீடுகளை விட்டுக்கொடுக்காமலும் சமூகத்தின் தேவைகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியும். இதைக் கியூபா நிரூபித்துக் காட்டியிருக்கிறது. வர்த்தகத்துக்காகவோ, நுகர்வு கலாசாரத்துக்காகவோ தன் சுற்றுச்சூழலை அழிப்பதற்கு இந்தத் தீவு நாடு அனுமதிக்காது. இந்தச் சவாலைச் சந்திப்பதற்குத் தொழில்முறை இயற்கைப் பாதுகாவலர்களுக்குத் தேவையான பயிற்சியை நாம் வழங்க வேண்டும். அது மட்டுமில்லாமல், மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் பரவலாக்க வேண்டும்” என்று புரட்சியைப் பாதுகாப்பதற்கான கியூப குழுக்கள் இடையே 2002-ம் ஆண்டில் அதிபராக இருந்த ஃபிடெல் காஸ்ட்ரோ பேசியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

“30 ஆண்டுகளுக்கு முன் (1970-கள் வரை) பெரும்பாலோர் சூழலியல் குறித்த விழிப்புணர்வைப் பெற்றிருக்கவில்லை. இரண்டாவது உலகப் போர் முடிந்து 25 ஆண்டுகள்வரை சுற்றுச்சூழல் பற்றிய எந்த அக்கறையையும் உலகில் பார்க்க முடியவில்லை. அந்தக் காலத்தில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணராமல் இயற்கைக் கட்டுமானங்களைக் கண்மூடித்தனமாகவும் தயவு தாட்சண்யமில்லாமலும் அதிவேகமாகச் சீரழித்துவந்தோம்,” என்று ஐ.நா.வின் ‘பாலையாதல்- நிலம் தரிசாதல்’ குறித்து 2003-ம் ஆண்டில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஃபிடெல் காஸ்ட்ரோ பேசியிருந்தார்.

"நம் காலத்தின் மிகப் பெரிய முரண் என்னவென்றால், மனிதக் குலம் தன்னையே அழித்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. ஆனால், தன்னையே முறைப்படுத்திக் கொள்வதற்கு இயலாமலும் அது இருப்பதுதான்." - ஏப்ரல், 2010

"இன்னும் சிறந்த, நியாயமான உலகத்தை உருவாக்குவதற்காக மக்கள் முன்பு போராடினார்கள், இப்போதும் கௌரவத்தை இழக்காமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதோ, மனிதகுலம் பிழைத்திருப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது, இதிலிருந்து தப்பிப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லை. இதை நாம் புறக்கணித்தால், எதிர்காலத்தில் எதுவும் எஞ்சியிருக்கப் போவதில்லை." - ஜனவரி, 2010

Health of Castro

===========================

அறுவை சிகிச்சை செய்து கொண்டார் காஸ்ட்ரோ. இந்த அறுவை சிகிச்சை 2006-ல் நடைபெற்றது. இதைச் செய்து கொள்வதற்கு முன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடமைகளை தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் `ஒருநாள் இறைவன், காஸ்ட்ரோவை எடுத்துச் செல்வார்’ என்றார்.

இவர் எப்போதுதான் சாகப்போகிறாரோ என்கிற தொனி கொண்ட வாக்கியம்!

கடவுள் நம்பிக்கை இல்லாத, காஸ்ட்ரோ இதற்கு அளித்த பதில் சுவாரசியமானது. “இப்போது புரிகிறது. தானே என்னை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க அரசின் அத்தனை கொலை முயற்சிகளிலிருந்தும் என்னைக் கடவுள் காப்பாற்றி இருக்கிறார்’’ என்றார்.

பிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் போதிய அளவு முன்னேற்றமடையவில்லை. “2008 பிப்ரவரியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை’’ என்று அவர் அறிவித்து விடவே, அந்தத் தேர்தலில் ரால் காஸ்ட்ரோ நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2013-லும் அவரே மீண்டும் அதிபராக தேர்வு பெற்றார்.

ஆக அவர் இப்போது இரண்டாம் முறையாக அதிபர். மூன்றாம் முறையும் ரால் காஸ்ட்ரோவே இந்தப் பதவியில் தொடர்வாரா? மாட்டாராம். 2018 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ரால் காஸ்ட்ரோ.

Murder attempts on Castro

=================================

அமெரிக்க உளவுத்துறை, காஸ்ட்ரோவை கொலை செய்ய 638 முறை முயன்றது என்றார், காஸ்ட்ரோவை பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான ஃபேபியன் எஸ்கலண்டே

கொலை முயற்சி என்றால் துப்பாக்கியோ, கத்தியோ இல்லை. காஸ்ட்ரோ பயன்படுத்திய சிகாரில் விஷம் கலந்தது ஒருவகை.

அவர் ஸ்கூபா டைவிங் எனப்படும் விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். இதற்கான அவர் உடையில் விஷக்கிருமிகள் நிரப்பப்பட்டன.

அவரது பால்பாயின்ட் பேனாவில் விஷம் நிரம்பிய ஒரு ஊசி இணைக்கப்பட்டது.பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட வலியே இல்லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும்.

ஒருகட்டத்தில் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அவர் செல்லும்போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, காஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பிடல் காஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத்துறை. குளிர்காலத்துக்கான க்ரீமை உடலில் தடவிக் கொள்வது காஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை காஸ்ட்ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.

ஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, காஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.

ஆக அமெரிக்காவுக்குக் கடும் ஏமாற்றம். உயிரைத்தான் எடுக்க முடியவில்லை, வேறுவிதத்திலாவது காஸ்ட்ரோவை நிலைகுலைய வைக்கலாம் என்பதற்காக அவரது பிரபல தாடியை அழித்திடும் வகையில் தாலியம் என்ற ரசாயனப் பொருள் அடங்கிய உணவுப் பொருளை வஞ்சகமாக அவரை உண்ண வைத்தார்கள்.

ஊஹூம், நடக்கவில்லை. அவர் வானொலியில் பேச வரும்போது அங்கு போதைப் பொருளை ஆவி வடிவில் பரப்பி, அவர் பேச்சு குழறலாக வெளிப்படச் செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் “கொலை முயற்சிகளிலிருந்து அதிக முறை தப்பிப்பது என்பது ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருக்குமானால், அதில் எனக்குதான் தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும்’’ என்றார் காஸ்ட்ரோ.

இந்தக் கொலை முயற்சிகளெல்லாம் “காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’’ என்ற பெயரில் சானல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப் பட்டது.

Conclusion

===================

உலகம் முழுவதும் கட்டாயமாகத் தன்னைத் திணித்துக்கொள்ள நினைக்கும் முட்டாள்தனம், காட்டுமிராண்டித்தனம், வலுவானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சட்டம் என்பனவற்றுக்கு மாறாக, இன்னொரு உலகம் சாத்தியம்தான். உண்மையில் அப்படி உலகமயமாக்கப்பட வேண்டியவை பன்னாட்டு ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமை, மக்கள் உடல்நலம், அனைவருக்கும் கல்வி, பண்பாடு போன்றவைதான் என்பதைக் கியூபா நிரூபித்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஃபிடெல் காஸ்ட்ரோதான்.

Source: Extracted from multiple articles of Tamil Hindu

Locations of visitors to this page