உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 3
8. குடும்பம் என்கிற கதம்பத்திலிருந்து அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகள் இருவரும் உதிரிப்பூக்களாக எஞ்சியிருப்பதாக இறுதிக்காட்சியில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் தலைப்புக்கு செய்த சிறப்பு.
9. படத்தின் நாயகர்களாக திகழும் இந்த இரண்டு குழந்தைகள்தான் கதையையும் திரைக்கதையையும் தீர்மானிக்கிறார்கள். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர்களை பேச அனுமதிக்காதது குறையாக பார்க்கிறேன்.
10. இசைஞானியின் இசை ஓவியம் போல் திரைப்படத்திற்கு தேவையான அழகிய நல்லுணர்வை வழங்குகிறது. “அழகிய கண்ணே” பாடலும் காட்சி அமைப்பும் காலத்தை வென்ற பாடலாக இன்றும் நிலைக்கிறது.
11. புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்றன்னையை பற்றி எந்த ஒரு விமர்சனமும் குறையும் பெரிதாக பேசப்படவில்லை. மாறாக ஆணாதிக்கத்தை பெரிதுபடுத்தி பெண்களை ஆண்கள் எப்போதும் கொடுமைப்படுத்துவார்கள் என்கிற பொது புத்தியில் பதிந்த புரிதலையே திரைப்படமும் எதிரொலிக்கிறது. ஏன் சிற்றப்பன் எல்லாம் கொடுமை செய்ய மாட்டார்களா ? அவர்களுக்கு அம்மாதிரியான எண்ணம் தோன்றாதா ?வில்லத்தனத்தை சித்தி மட்டும் தான் காட்டுவாரா ? என்கிற கேள்வி எல்லாம் புதுமைப்பித்தனிடம் கேட்க வேண்டும். சிறுகதை ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு கதையை அமைத்துள்ளார். அதைப்போலவே நாமும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்கிற புரிதலுக்கு ஆசிரியர் உதாரணமாக திகழ்கிறார்.
12. இரண்டாவது மனைவியாக வருபவர் கணவனின் முதல் மனைவியின் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க தவறுகிறார். அதை சுட்டிக்காட்டிய கணவனுக்கு மழுப்பாலான பதிலை தருகிறார். அதை ஒரு குற்றம் குறையாகவே அவர் கருதவில்லை. இங்கே பெண்ணியம் பார்க்க தேவையில்லை. "பெண்கள் தான் குழந்தைகளை பார்க்க வேண்டும், ஆண்கள் பார்க்க வேண்டாமா ?" என்கிற கேள்விக்கு பொருள் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் கணவன் மனைவி யார் கடமையிலிருந்து தவறினாலும் அது தவறே. கணவன் கதாபாத்திரத்தை ஏற்கனவே வில்லனாக சித்தரித்து விட்டார்கள். அதனால் இயக்குனர் சரியான முறையில் தான் இத்தருணத்தை கையாண்டு இருக்கிறார்.
13. இரண்டாவது மனைவி தன் கணவனின் குழந்தைகளை பராமரிக்காதது பெரும் குறையாக கருதாது முதல் மனைவியின் தங்கையை கணவன் மான பங்கம் செய்வதை கண்டறிந்த உடன் எந்த ஒரு பெண்ணும் இதை அனுமதிக்க மாட்டாள் என்று வீர வசனம் பேசிய பிறகு கணவனை வெறுத்து விடும் அளவிற்கு ஒரே வினாடியில் மாறிவிடுகிறார். அதாவது தனது மனைவி பதவிக்கு ஒரு பங்கம் என்றால் அது குற்றம், அதுவே தான் தாய் ஸ்தானத்திலிருந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கடமையிலிருந்து தவறினால் அது குற்றமில்லை என்கிற மனோபாவம் தான் இதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு இயல்பாகவே தன்னல உணர்வு ஆண்களை விட அதிகம். அதைத்தான் இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதாக புரிந்து கொள்கிறேன். எவ்வாறு சாதி உணர்வும் இன உணர்வும் மொழி உணர்வும் நம் ரத்தத்திலேயே கலந்து அதை தவறு இல்லை என்கிற அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறோமோ அதே போலத்தான் பெண்களுக்கு இயல்பாகவே உள்ள தன்னல உணர்வினால் விளையும் தவறுகளையும் அவர்களை புண்படுத்தாதவாறு வசதியாக மறந்து விடுகிறோம்.
14. அடுத்த வீட்டு பிரச்சனை நம்மை பாதிக்காத வரை அது நம் பிரச்சனை கிடையாது என்கிற மனோபாவமே பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் இருந்து வருகிறது. அது ஏதோ இன்று நேற்று வந்தது கிடையாது. எண்பதுகளில் இத்திரைப்படம் வந்திருந்தாலும் அக்கால கட்டத்திலும் இதுவே தான் கதை. இறுதிக் காட்சியில் ஊரே திரண்டு வந்து மேலாளரை தாக்க வருவதாக காட்சிப்படுத்தியிருப்பதை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதால் அதையெல்லாம் நம்பத் தேவையில்லை.
15. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹாஜா செரிபை பெயரிடும் தருணத்தில் 'ராஜா' என்று அழைத்துள்ளனர். அதற்கான காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
நன்றி வணக்கம்.
Post a Comment