ரிங்வூட் ஸ்டேட் பார்க்
ரிங்வூட் ஸ்டேட் பார்க்
24-Oct-2020 சனிக்கிழமை விடுமுறை நாள், எங்காவது போய் வந்தாகணும்.
இலை நிறம் மாறும் இந்த பருவத்தை பார்த்து ரசிக்க போய் வரலாம்னு முடிவு பண்ணோம்
கூகிளில் எங்கு போகலாம் என்று தேடியதில் சிக்கியது ரிங்வூட் ஸ்டேட் பார்க்
பழுத்த இலைகளை பார்த்து ரசிப்பதென்பது ஒரு சாடிஸ்ட் மனநிலை தான், இறக்கும் தருவாயில் உள்ள இலைகளை ரசித்து போட்டோ எடுப்பதை வேறு எப்படி எடுத்து கொள்வது ?
இலைகள் ஏன் நிறம் மாறுகிறது என்கிற உண்மையையும் கூகிளில் தேடி அறிந்துகொண்டேன்.
போதிய சூரிய வெளிச்சமின்மையால், குளோரோபில் உற்பத்தி திறன் குறைவால், இலை தனக்குரிய பச்சை நிறத்தை இழந்து பழுப்பு நிறமடைகிறதென்ற உண்மையை அறிந்த பின் பெரிய அறியாமையில் இருந்திருக்கிறோமென்பதை உணர்ந்தேன்.
நாங்கள் இருக்குமிடத்திலிருந்து வட திசையில் ஒரு மணி நேர கார் பயண தூரத்தில் உள்ளது, ரிங்வூட் ஸ்டேட் பார்க்.
இனிய பாடல்களை செவித்து கொண்டே ரிங்வூட்டை சென்றடைந்தோம்.
இயற்கை அன்னை எங்களுக்கு சிறந்த காட்சிகளை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் சென்றோம்.
கருகிய நிலையில் தான் பல மரங்களின் இலைகளை கண்டோம்.
அன்றைய பயணத்தில் இயற்கை சில பாடங்களை எங்களுக்கு கற்றுக்கொடுத்தது.
1. இலைகள் பழுப்பு நிறத்திலிருந்து கருகிய நிறத்திற்கு வந்திருப்பது, இலையுதிர் காலம் சீக்கிரமே முடிவுற்று பனிக்காலம் விரைவிலேயே தொடங்கப்போவதை தான் இயற்கை நமக்கு அறிவிக்கிறது.
2. பனிக்காலமென்பது வடக்கிலிருந்து தெற்கிற்கு பயணிக்கிறது என்கிற உண்மையும் அறிந்தோம். அதே நாள் நாங்கள் தெற்கிலுள்ள ஏதாவது இடத்திற்கு அதே ஒரு மணி நேர கார் பயணத்தில் சென்றிருந்தோமேயானால் பழுத்த மஞ்சள் மற்றும் சிகப்பு நிற இலைகளை கண்டு பல அற்புத புகைப்படங்களை க்ளிக்கியிருக்கலாம். நாங்கள் தவறான திசையில் தாமதமாக சென்று விட்டோம் என்று புரிந்தது.
அருகிலேயே ஷெப்பர்ட் லேக் என்று ஒரு ஏரி இருந்தது. அமைதியான சூழ்நிலை. திறந்த வெளி பார்ட்டி பண்ணுவதற்கென்றே பல இருக்கைகளும் பெஞ்சுகளும் இருந்தன. ஒரு குழு அமைதியாக தங்கள் விடுமுறையை கழித்து கொண்டிருப்பதை கண்டோம்.
ஏரிக்கரையோரம் பரந்த புல் வெளி விளையாடுவதற்கென்றே இருந்தது.
அமெரிக்காவிடமிருந்து பல வகைகளில் காப்பி அடிக்கும் இந்தியர்களாகிய நாம் இயற்கையை போற்றி பாதுகாத்து வைத்திருக்கும் வழிமுறைகளை ஏனோ மௌனமாக விட்டு விடுகிறோமென்பதையும் உணர்ந்தோம்.
புதிய இடத்தை பார்த்த சந்தோஷத்தில் மீண்டும் ஒரு மணி நேரம் பயணித்து எங்கள் கூடடைந்தோம்.