Saturday, May 31, 2025

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 5
 
சங்க இலக்கியத்தின் பெருமைகள்
 
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "மங்கள வாழ்த்து" என்கிற பாடலை இளங்கோவடிகள் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
...
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்
...
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"
 
சங்க இலக்கியத்தில் எங்கயாவது ஒருத்தன் சாமியை போற்றிருக்கானா ? வாழ்ந்த நகரத்தைப் பற்றி பெருமையாக எழுதி இருக்கிறார்கள்.
 
சங்க இலக்கியத்துல 52 இடத்துல உவமை வருது "இவள் தொண்டி என்ன" தொண்டிங்கிற நகரத்தை மாதிரி அழகா இருக்கா! இவள் முசிரியை போல அழகா இருக்கா! இவளுடைய நெற்றி இந்த நகரத்தினுடைய மாதிரி அழகா இருக்கு. இப்ப நீங்க திடீர்னு போய் ஒரு பொம்பளை பிள்ளையை போய் பார்த்து பாண்டி பஜார் மாதிரி அழகா இருக்கா அப்படின்னு சொன்னா அடிக்க வந்துருவான்.
 
ஒருத்தனுடைய உடலில் உள்ளத்தில் அவனுடைய நாளங்களில் ரத்தத்தில் நகர நாகரிகம் எவ்வளவு ஆழமாக ஊறிப்போய் இருந்தால் ஒரு பெண்ணினுடைய அழகை வர்ணிக்கும் போது ஒரு நகரத்தின் நினைவு ஒருவனுக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு நாகரிகம் இந்தியாவினுடைய முதல் நகர்மைய இலக்கியம் சங்க இலக்கியம்.
 
The First Urban Literature of India is Sangam Literature. The First Ocean Knowing Literature.
 
கடலை முழுவதுமாக அறிந்த ஒரு இலக்கியம் சங்க இலக்கியம்! தாயை தெய்வமாக வணங்கிய இலக்கியம் சங்க இலக்கியம்! திணைக் கோட்பாட்டை கொண்ட இலக்கியம் சங்க இலக்கியம்! வெளிநாட்டு வணிகத்தை அறிந்த இலக்கியம் சங்க இலக்கியம்! அப்ப இதெல்லாம் tally பண்ணி பார்த்தீங்கன்னா சிந்துவெளி பண்பாடு என்பது ஒரு வன்பொருள் it's Hardware, "Indus Hardware". சங்க இலக்கியம் தான் அதன் மென்பொருள் "Indus Software". சங்க இலக்கியம் என்பது சிந்துவெளி என்ற வன்பொருளின் மென்பொருள்.
 
சங்க இலக்கியத்தை வந்து நீங்க ஒற்றை வரியில ஏதோ ஒரு பத்திரிகை நிருபர் எல்லாம் எழுதி புலவர் எல்லாம் கூடி இன்னைக்கு மார்னிங் என்ன பார்த்த, ஈவினிங் என்ன பார்த்த கவிதையா எழுதிட்டு வான்னு எழுதல, பாரி ஓரி காரின்னு ஏழு கடை ஏழு வள்ளல் இருந்தான்னா அந்த ஏழு பேருமே சாதாரண மலைநில மன்னர்கள். அதுல சேரனும் கிடையாது, பாண்டியன் கிடையாது சோழன் கிடையாது.
 
நான் பைனான்ஸ் பண்றேன், சங்க இலக்கியத்தின் பாண்டியன் சொல்லி என்னை எட்டாவது ஆளா சேர்த்துக்கோன்னா சேர்க்க முடியாது. ஏன்னா தமிழ் தொன்மங்கள் அவ்வளவு ஆழமானது! கடையேழு வள்ளல்ன்னா கடையேழு வள்ளல் தான். அந்த ஏழு பேருமே சாதாரண மலைநிலத் தலைவன் தான். பேரரசர் இல்லை! ஆனால் பேரரசின் உருவாக்கத்திற்கு முன்னால் தமிழ் தொன்மங்கள் இருக்கிறது, வணிகம் போற்றப்படுகிறது, பொருள் போற்றப்படுகிறது , வெளிநாட்டு வணிகம் போற்றப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் கவரிமான் பேசப்படுகிறது, கவரிமான் என்ன சாப்பிடும், எங்க இருக்கும், அது எப்படி என்ன மரத்துக்கு கீழே விழுகும். சிங்கம் நர்மதை நதியைத் தாண்டி தெற்கே வந்ததே இல்லை. ஆனால் சிங்கத்தினுடைய அனாட்டமியை சங்க இலக்கியம் பேசியது போல இந்தியாவில் வேற எந்த இலக்கியமும் பேசவில்லை. கவரிமான் உணவு பழக்கத்தை வேற எந்த இலக்கியமும் பேசவில்லை. ஒட்டகம் எலும்பு தின்னும் என்பதை சங்க இலக்கியம் மட்டும்தான் பதிவு செய்கிறது. ஆனால் ஒட்டகம் தமிழ்நாட்டில் இல்லை.
 
முடிவுரை
 
“கட்டுகதைகள் வரலாறானால்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்கிற பாகுபாடு எதற்கு ?
கற்பனைக்கு தேவையில்லை கரிமக்கணக்கு
ஆனால் உண்மைக்கு தேவை எப்போதும் ஓர் உரைகல்
தரவுகள் போன்ற ஊக்கம் வேறில்லை
புரிதலை போன்ற ஆக்கம் வேறு ஒன்றுமில்லை
உண்மை வரலாறு யாரும் யாருக்கும் எழுதும் உயில் அல்ல உரிமை
வரலாறு என்பது ஒரு உரிமை
வரலாறு என்பது சலுகை அல்ல”
 
“இந்தியா ஒரு உருக்குப்பானை அல்ல
India is not a melting pot”
 
உருக்கு பானை என்பது பல உலோகங்களின் கூட்டணியில் ஒரு உலோகம் உருவாக்கப்பட்டு பல தனித்துவம் வாய்ந்த உலோகங்கள் அழிக்கப்பட்டு உருவாவது. அது போல ஆதிக்க சாதிகளின் கூட்டணியில் வலுவற்ற சாதியினரை அழித்து உருவாகும் சமுதாயம் இந்தியாவின் அடையாளம் அல்ல.
 
"India is not a salad bowl"
 
மேற்கத்திய கலாச்சார உணவான இலையமுது கிச்சடி கிண்ணத்தில் ( Salad Bowl ) நாகரீகம் கருதி குறிப்பிட்ட சில காய்கறிகளே இடம்பெரும். மாறாக, இந்தியா என்பது அனைத்து வகையான காய்கறிகளையும் உள்ளடக்கிய கலவையாக விளங்குவதே இந்தியாவின் பன்முகத்தன்மையின் அடையாளமாகும்.
 
இந்தியா என்பது அற்பமான மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாடல்ல என்கிற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
 
நன்றி வணக்கம்.
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 4
 
சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பம்சங்கள்
 
எகிப்திய நாகரிகத்தின் மீது அவ்வளவு மரியாதை கிடையாது. எகிப்திய நாகரிகம் ஒரு ராஜாவை புதைக்கிறதுக்கு அவரை பாடம் பண்ணி புதைச்சு அவர் கூட அடிமைகளை புதைச்சு பெண்களையும் புதைச்சு அவர் செலவழிக்கிறதுக்கு வைரம் வைடூரியம் அவர் செத்த பிறகு செலவழிக்கிறதுக்கு பணம் வைத்திருந்தது. எகிப்திய நாகரிகத்தில் அடிமைகளை காணலாம். சுமேரிய நாகரீகம் முழுவதும் கோயில்களே ஆக்கிரமித்திருந்தன. ஆனால் சிந்துவெளி நாகரிகத்தில் கோயில்கள் இல்லை, பிரமிடுகள் இல்லை! ஆனால் குப்பைத் தொட்டிகள் இருந்தன. வடிகால்கள் இருந்தன. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவன் வடிகால் அமைத்திருந்தான் என்பதுதான் பெருமை. ஒருவன் குளியலுக்காக பெரும் குளியல் இடம் ஒதுக்கியிருந்தான். குளிப்பதற்கு ஓர் இடம், உடை மாற்றுவதற்கு ஓர் இடம் என்று படிக்கட்டு தரையில அமைத்து Anti sliding skid ஆகாம இருப்பதற்கு Anti skidding மாதிரி சொரசொரன்னு போட்டிருக்கான். அந்த ஒரு ஒரு கல்லுக்கும் செங்கலுக்கும் இன்னொன்னுக்கும் நடுவுல இருக்கிற பகுதியில தார் பூசி இருக்கான். Bitumen அப்படின்னு சொல்ற இந்த தாரை 5000 வருஷத்துக்கு முன்னால Water leak proof என்று ஒரே ஒரு குளிக்கிற இடம் இந்த உலகத்தில் இருந்தது என்றால் அது சிந்துவெளி நாகரிகத்தில் தான் இருந்தது.
 
கடல் தெரியாத ஒருவன் சிந்துவெளி நாகரிகத்தை கட்டமைத்திருக்கவே முடியாது. கடல் யாருக்கு தெரியும் இந்த இந்திய துணைக்கண்ட இலக்கியத்தில் கடலைப் பற்றி அதிகமாக பேசுகிற ஒரே இலக்கியம் சங்க இலக்கியம். நகரத்தை பற்றி அதிகமாக பேசுகிற ஒரே இலக்கியம் சங்கத் தொல்லியல் இலக்கியங்கள்.
 
சிந்துவெளியில கிடைக்கிற பகடை கனசதுர பகடை (Cubical Dice). இங்க கீழடியில் கிடைச்சிருக்கிற பகடையும் கனசதுர பகடை . கனசதுர பகடையில வந்து எப்படின்னு கேட்டீங்கன்னா ஆறு சைடும் டாட் போட்டிருக்கும் சங்க இலக்கியத்துல கலித்தொகையில வந்து “பத்துருவன் பெற்றான் மனம் போல நந்தியால்” அப்படின்னு ஒரு உவமை வரும். அதாவது அவனுடைய மகிழ்ச்சி எவ்வளவு கரைபுரண்டு ஓடுதுன்னா சின்ன நம்பர் விழுந்தா மகிழ்ச்சி கம்மியா இருக்கு, அவன் கேட்ட நம்பர் கிடைக்கவே இல்லைன்னா அவன் காதலனுக்காக வெயிட் பண்றவருடைய மனநிலை, அவன் காதலன் நினைச்ச உடனே வந்துட்டதுனால அவனுடைய மனசு எவ்வளவு ஹாப்பியா இருந்ததுன்னா பத்தாம் நம்பர் கிடைச்சா, பகடை விளையாடும்போது பத்தாம் நம்பர் கிடைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அந்த மாதிரி சந்தோஷம் அவனுடைய காதலன் வந்ததுன்னு சங்க இலக்கியத்தில் எழுதுறான். இந்த பத்தாம் நம்பர் வந்து செவ்வக பகடையில கிடைக்காது, அதுல நாலு பக்கம் தான் இருக்கும் அதிகபட்சம் எட்டு நம்பர் தான் விழுகும். பத்தாம் நம்பர் கிடைக்கிறதா இருந்தா அது ஒரு கனசதுர பகடையா இருக்கும்னு நான் என் புக்ல எழுதுறேன்.
 
'மகாபாரதம்' நடைபெற்றதாக கூறப்பட்ட எந்த ஒரு வடக்கிந்திய பகுதியிலும் ஒரு பகடை கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
 
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 3
 
வரலாறும் பயணமும்

தமிழ்நாட்டுல 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுல பஞ்சம் புழைக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான பேர் உலகம் ஃபுல்லா கொண்டு போய் விட்டிருக்காங்க. ஒப்பந்த கூலியும் அடிமை முறையில அடிமை வணிகம் நடந்திருக்கு. தமிழ்நாட்டுல இருந்து அங்க போகும்போது அடிமைகளா போனப்ப அவங்களோடு சேர்ந்து போன சாமி யாரு ? பிரசன்ன வெங்கடாஜலபதியா ரங்கநாதரா? இல்லை!முனியாண்டி, மாரியம்மா, காளியம்மா, அங்காள பரமேஸ்வரி இப்படியாதான் போயிருக்காங்க.
 
வரலாறு என்பது வந்த வழி !
பயணங்களின் கூட்டுத்தொகை தான் மனிதர்களின் வரலாறு !!
 
இந்த வரலாற்றுக்கான ஆபத்து ஒரே ஒரு முனையிலிருந்து வருவதாக நான் நினைக்கவில்லை. வரலாற்றுக்கு ஒரு ஆபத்து இருக்குன்னு சொன்னா அந்த வரலாற்றை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் அது நீங்கள் எதிரியாக சித்தரிக்கிற ஒரு ஒற்றை முனை பற்றியது அல்ல! உங்களை சுற்றி இருக்கிற வட்டத்தைப் பற்றியதும் கூட. வரலாற்றுக்கான உண்மையான தரவுகளுக்கான விரோதிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். உங்களுக்கு ரொம்ப பக்கத்திலேயே இருக்காங்க. உங்கள் அருகிலே உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் நீங்கள் வரலாற்றை காப்பாற்ற வேண்டும். நான் என்ன சொல்ல விரும்புறேன் கேட்டீங்கன்னா, தரவு சார்ந்து இயங்கணும்.
 
வரலாறு என்பது வெறும் மண் சார்ந்ததா ?அல்லது மனிதர்கள் சார்ந்ததா ?
 
இந்த தெளிவில்லாமல் வரலாறு பற்றி பேசவே முடியாது. பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு. மனிதகுல வரலாறு என்பது பயணங்களின் கூட்டுத்தொகை.
 
பாதையை விட முக்கியம் பயணம். எந்த ரூட்ல போனாங்கிறதை விட பயணம் Journey is more important. பயணத்தை விட முக்கியமானவன் பயணி. பயணம் என்ன பெரிய பயணம், பயணி எங்கெங்க போயிருக்கான், மெக்ஸிகோக்கு போயிருக்கான், 600 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் அடிமைகள் மெக்ஸிகோல போய் வேலை பார்த்திருக்கான், 400 ஆண்டுகளுக்கு முன்னால் Fiji தீவுக்கு போயிருக்கான். உலகத்தினுடைய எல்லா மூலைகளிலும் அவன் பயணித்திருக்கிறான். வாழ்க்கை அவனை தள்ளியது திசைகள் என்பவை நேற்று வந்தவை. தேடல்கள் மனிதனின் உடன் பிறந்தவை !
 
சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு
 
எங்களுடைய ஆசிரியர் ஐராவத மகாதேவன் கூட சொல்றாரு ஏன் 'திராவிட கருதுகோள்' என்று சொல்றீங்க 'திராவிடமே' சொல்லுங்கள். ஏனென்றால் சிந்து மொழி பொறிப்புகளை ஒரு இருமொழி பொறிப்புகளின் துணையோடு வாசித்து ஒருவன் உலகத்திற்கு அறிவிக்கும் வரை 99% அப்படி ஒரு டவுட்டை கிரியேட் பண்ணி இதுதான் என்ற சூழலை பண்பாட்டு தரவுகள் பன்முகத் தரவுகள் மரபணு தரவுகள் தொல்லியல் தரவுகள் இதையெல்லாம் சேர்த்து வச்சு உருவாக்கி அந்த இடத்துல வந்து நிறுத்திரனும். அதுக்கு பின்னால அதை மக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டிய வேலையை இயக்கத்தை சார்ந்தவர்கள் அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பொதுமக்களிடம் எடுத்துட்டு போகணும். என்னை போன்ற ஆய்வாளர்கள் இதுதான் முடிஞ்ச முடிவு அப்படின்னு சொன்னா I take a side, no researcher takes a side. ஒரு தகுதி உள்ள எந்த ஆய்வாளரும் இதுதான் வசதியாக ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க மாட்டான்.
 
பாலகிருஷ்ணனை பற்றி
 
நான் வந்து படிச்சிட்டு, ஆசிரியரா போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு முனைவர் ஆகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, ரிசர்ச் பண்ணாம நான் வெளிய ஓடி போயிட்டேன். ஒரு ₹240 சம்பளத்துக்கு பத்திரிக்கையாளரா போயிட்டேன். பத்திரிக்கையாளரா இருந்து அங்க இருந்து ஐஏஎஸ் போயிட்டேன். ஆனா தொடர்ந்து ரிசர்ச் பண்ணிட்டே இருக்கேன் நான் சொல்லிட்டு தான் போனேன் எங்க ப்ரொபசர்ட்ட I will not do PhD research but I will spend my entire life in doing research.
 
அகழாய்வுகளின் அவசியம்
 
1930களில் தீட்சித் என்பவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு உரை நிகழ்த்துறார். அது 1939ல புத்தகமா வருது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதை ஒட்டிய பகுதிகளில் பண்டைய துறைமுகமான பகுதிகளில் முழுமையான அகழாய்வுகள் செய்யப்பட வேண்டும். அத்தகைய அகழ்வாராய்ச்சிகள் சிந்துவெளி பண்பாட்டின் சமகால பண்பாடு அல்லது சற்று பிந்தைய காலகட்ட பண்பாடு என்று கருதத்தக்க ஒரு பண்பாட்டிற்கான தடையங்களை அளிக்கக்கூடும். இன்னைக்கு அவரது உரை முடிந்து 80 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.
 
இரண்டாயிரத்துக்கு பிறகு தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி குறித்த முயற்சிகள் நடைபெறத் தொடங்கின. இடைப்பட்ட காலத்தில் ஏன் எந்த முயற்சியையும் யாரும் எடுக்கவில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 2
 
சிந்துவெளியின் சிறப்பம்சங்கள்
 
சிந்து சமவெளி நாகரிகம் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலத்தை கொண்டது என்று கண்டுபிடித்து உள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பித்து யமுனை வரை பாகிஸ்தானுக்கு வடமேற்கில் உள்ள ஸ்வாட் பகுதியில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள தைமாபாத் வரை பரந்து விரிந்துள்ளது.
 
இது ஒரு ஆரிய பண்பாடு இது ஒரு வேத பண்பாடுன்னா குதிரை இல்லாத வேதமாயா ?குதிரை இல்லாத ஆரியரா ? நீ வரும்போதே குதிரையோட தானே வந்த இங்க எங்க குதிரை இருக்கு ? அப்படின்னு நம்ம ஆளுங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சோம்! அங்க வந்து காளமாடு இருக்கு ! கம்பீரமான காளமாடு இருக்கு ! எருமை மாடு இருக்கு !சிந்துவெளியில் இருந்தவங்க சுமேரியாவுக்கு எருமையை ஏற்றுமதி பண்றாங்க. எருமையை பழக்கின நாடு இது. சிந்துவெளி அவ்வளவு பெரிய ஒரு நாகரிகம் ரைனோசரஸ் இருக்கு, காண்டாமிருகம் இருக்கு, புலி இருக்கு ஆனா சிங்கம் இல்ல! குதிரை இல்ல !! காட்டு கழுதை இருக்கு ! ஆனா குதிரை இல்லை !
அசோகர் மரத்தை நட்டார் சாவடியை நட்டார் புத்த மதத்தை பரப்பினார் பொண்ணையும் மகனையும் இலங்கைக்கு அனுப்பினார் எல்லாம் படிக்கிறோம் ஆனா உங்களுக்கு தெரியுமா ஒரு 200 வருஷத்துக்கு முன்னால வரைக்கும் அசோகர்னு ஒரு ஆளு இந்த நாட்டுல வாழ்ந்தார்னே அப்படி ஒரு மன்னர் இருந்தாருன்னே யாருக்கும் தெரியாது.
 
ஜேம்ஸ் பிரின்சப்னு (James Prinsep) ஒரு வெளிநாட்டுக்காரர் வராம இருந்தா அசோகர்னு ஒரு ஆளு இங்க இருந்தாருங்கிறதே அமுக்கி இருப்பாங்க.
 
திராவிட மொழி குடும்பம் என்று ஒன்று இருப்பதை பிராகுயி மொழியிலிருந்து வடக்கில் இருக்கக்கூடிய மொழிகளை எல்லாம் தொட்டு திராவிட மொழி குடும்பம் என்ற கருத்தியலை எல்லி சொன்னாரு அதுக்கு பின்னால் இதை ஆணித்தரமாக முன்வைத்தது கால்டுவெல். அதனால "அவர்களுக்கு" கால்டுவெல் பிடிக்காது, பிரின்ஸ் பிடிக்காது.
 
பீகார் அருங்காட்சியகம் ரொம்ப நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டோம்
 
அங்கு சாணக்யா படத்தை பெரிதாக வரையப்பட்டு அதற்கு அருகில் சிறியதாக சந்திரகுப்த மௌரியரின் படத்தை வரைந்திருந்தார்கள் அதைக் கண்டு பின்வருமாறு கேள்வி கேட்டேன்.
சந்திரகுப்த மௌரியரை நீங்க கொண்டாடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவர் சொல்றாரு, சார் அந்த சந்திரகுப்த மௌரியரை கொண்டாட இப்பதான் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சென்ற ஐந்து ஆறு வருடங்களாக சந்திரகுப்த மௌரியர் ஜெயந்தின்னு ஒன்னு கொண்டாடுறாங்க. அப்படின்னு சொல்லிட்டு அதோட சேர்த்து சொன்னாரு அந்த பங்க்ஷன் சார் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த எம்எல்ஏ மந்திரிங்க மட்டும்தான் சார் போவாங்க மத்த மந்திரிங்க எல்லாம் போகமாட்டாங்க சார். ஏனென்றால் இந்த சந்திரகுப்த மௌரியர் ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். அவர் முறா (Mura) என்ற அவருடைய அம்மாவினுடைய பெயரிலிருந்து மவுரியா (Maurya) என்கிற ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
 
சந்திரகுப்த மௌரியரின் பற்றிய பின்னணியை தெரிந்து கொள்வோம்.
 
செலூகஸ் நிகேட்டர் (Seleucus I Nicator) என்பவர் அலெக்சாண்டர் பேரரசின் பிரதான படைத்தளபதிகளில் ஒருவர் மற்றும் அவரது முக்கியமான வாரிசுகளில் ஒருவர். அவர் செலூசிட் பேரரசை நிறுவினார். இது மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. அவர் சந்திரகுப்த மௌரியர் (Mauryan Empire) உடன் மோதினார். பின்னர் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் படி, அவர் சந்திரகுப்தருக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளை விட்டுக்கொடுத்தார் மற்றும் 500 போர் யானைகளைப் பெற்றார். இந்த ஒப்பந்தம் இந்தோ-கிரேக்க உறவுகளின் தொடக்கமாக கருதப்படுகிறது
சில வரலாற்று குறிப்புகளின்படி, செலூகஸ் தனது மகளை (ஒருவேளை ஹெலினா என்று பெயர்) சந்திரகுப்தருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இந்த திருமண உறவு, மௌரிய பேரரசு மற்றும் செலூசிட் பேரரசு இடையேயான இராஜதந்திர உறவை வலுப்படுத்தியது.
 
பாலகிருஷ்ணனின் உரை தொடர்கிறது
 
ஏன் சாணக்கியரைப் பற்றிய கேள்வி வறலாற்றுப்பதிவில் எங்கேயுமே கிடையாது. இது ஒரு வரலாற்று கதாபாத்திரம் கூட கிடையாது. அர்த்தசாஸ்திரம் அப்படியே ஊதி ஊதி பெருக்கி சினிமாவாக மாற்றி இப்ப கடைசியா சாணக்கியா சீரியல் என்று அந்த கதாப்பாத்திரத்தை அப்படியே ஊதி ஊதி பெருக்கி விட்டார்கள்.
ஒருவர் ஜெயிச்சு வந்ததுக்கே மூளையா இருந்தவர் ஒருத்தர், அவர் மூளைதான் பெரிய மூளை. ஒருத்தன் ஜெயிச்சான்னா உண்மையிலே ஜெயிச்சவனை பாராட்டணும். ஜெயிச்சவனுக்கு பக்கத்துல இன்னொரு கேரக்டர் கிரியேட் பண்ணி இவர் சொல்லிதான் எல்லாம் ஜெயிச்சாரு என்று பூசி முழுகிறார்கள்.
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 1
 
பஞ்ச் வசனங்கள்
 
"வரலாறு என்பது வந்த வழி. பயணங்களின் கூட்டுத்தொகை தான் மனிதர்களின் வரலாறு"
"தரவுகளால் வரலாற்றை கட்டமைக்காவிட்டால் கட்டுக்கதைகள் வரலாறு என்ற பெயரில் உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும். You can't do anything about it."
“சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே”
"காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமல்ல கடந்த காலமும் தான்".
"வரலாறு என்பது மக்களின் வரலாறு. மக்களின் வரலாறே வரலாறு மற்றதெல்லாம் வரப்புத் தகராறு"
"வரலாறு என்பது உறைப்பனி அல்ல, ஓடும் நதி! வரலாறு என்பது உறைந்த பனி அல்ல, ஓடும் நதி! History is evolving and ever flowing stream."
"கீழடி என்பது வேறொன்றுமில்லை இன்னும் முழுவதுமாக தோண்டப்படாத சங்க இலக்கியம்.
சங்க இலக்கியம் என்பது வேறொன்றுமில்லை இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி"
"சங்க இலக்கியம் என்பது ஒரு மீள் நினைவு இலக்கியம்"
“வரலாறு என்பது உரிமை. சலுகை அல்ல”.
"முதல் மூன்று நூற்றாண்டுகளில் 300 ஆண்டுகளில் தெற்காசியாவில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் 40 விழுக்காடு தமிழ் நூல்கள்."
"ஒரு நாட்டினுடைய ஒட்டுமொத்த வரலாறு என்பது வட்டார வரலாறுகளின் (Local History) கூட்டுத்தொகையாத்தான் இருக்கணும். Local History should be the building block for National History. அதில் விளிம்பு நிலை மனிதர்களுடைய வரலாறு இருக்கணும். The people from the fringes, voices of the voiceless அவர்களுடைய வரலாறு பேசப்பட வேண்டும்."
 
General Sir John Marshall
1924ல செப்டம்பர் 20 ஆம் தேதி ஜென் சார் ஜான் மார்ஷல் இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் வீக்ல அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்காவிட்டால் நம்முடைய வரலாறு வேற மாதிரி இருக்கும். அந்த வரலாறுல ஹரப்பா இருக்காது. முகஞ்சோதரா இருக்காது. கீழடி இருக்கவே இருக்காது. வேதங்கள் இருக்கும். ஆக, அந்த வரலாற்றை புரட்டிப் போட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ஜான் மார்ஷல் அவர்கள்தான் வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை கண்டறிந்து அந்த நாகரீகம் திராவிட இனக் குழுவை சார்ந்தது என்ற கருத்தை தெரிவிக்கிறார். இந்தக் கருத்தை தான் இன்றும் மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் அகழ்வாராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
ஆர் பாலகிருஷ்ணனை பற்றி
நான் ஒரு சாதாரண பள்ளியில் படித்து ஒரு சாதாரண கல்லூரியில் படித்து யாரும் படிப்பதற்கு "பயப்படுகிற" தமிழ் இலக்கியத்தை படித்து வேறு எந்த தேர்வையுமே என் வாழ்க்கையில் எழுதாமல் ஒரே ஒரு முறை ஒரே ஒரு தேர்வுக்காக விண்ணப்பித்து ஒரே முறை எழுதி ஒரே ஒரு முறை நேர்காணலுக்கு டெல்லிக்கு முதன்முதலாக சென்று ஐஏஎஸ் வாங்கி எத்தனையோ பேர் சொல்லியும் பத்திரிக்கை துறையில் பணியாற்றி "தமிழ் மாணவர் நீங்க ஐஏஎஸ் ஆயிட்டீங்க!அதனால இங்க வந்து போகும்போது முதலமைச்சரை பார்த்துவிட்டு செல்லுங்கள் மீதி எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். கட்டாயம் நீங்கள் தமிழ்நாட்டில் தான் வேலை பார்க்க வேண்டும்" என்று சொல்லியும் கூட அவரை பார்க்காமல் மசூரிக்கு சென்றேன். ஏனென்றால் நான் தமிழ் படித்தவன் என்பதை எந்த வகையிலும் ஒரு சலுகையாக பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் I am succumb to none ! நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை ! என்பதில் உறுதியாக இருந்ததால் என்னை இந்தியாவுல தானே போஸ்டிங் போட போறாங்க இந்தியாவில் எங்கிருந்தாலும் நான் வேலை பார்ப்பேன் என்று ஒரிசாவுக்கு போய் அங்கு ஒரிசா மாநிலத்தினுடைய பண்பாட்டுச் செயலாளராக நான்கு ஆண்டுகள் இருந்து நிதித்துறை செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி மொத்தம் எட்டு பட்ஜெட்ல ஒர்க் பண்ணி இருக்கேன்.
 
இந்திய பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சி
ஐஐடில இருந்து எனக்கு ஒரு விருது கொடுக்கிறேன்னு சொன்னா வேண்டாம்னு விரட்டி விட்டுருவேன். ஏனென்றால் இந்த நாட்டில் இப்போது அறிவியல் தொழில்நுட்பக் கழகங்களில் அறிவியல் மனப்பான்மை (Scientific Temperament) குறைந்து அவர்கள் வரலாற்றில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள், it's none of their business.
உலக பட்டியலை நீங்க கூகுள் செய்து பாருங்க. உலக நாடுகளின் பட்டியல்ல தலைசிறந்த உயர்நிலைக் கல்லூரிகள் அதாவது பல்கலைக்கழகங்கள் இந்த நிறுவனங்களை பாருங்க. கடந்த எட்டு ஆண்டுகளாக முதல் 150 பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கூட இல்லை. ஐஐடி ஐஐஎம் எல்லாம் சேர்ந்து ஒரு நிறுவனம் கூட இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு பின்னால் (2024 ஆண்டின் நிலவரப்படி) ஒரு 10 15 நாளைக்கு முன்னால தான் ரிசல்ட் வந்தது. ஐஐடி பாம்பே 149 ஆ வந்திருக்கு.
 
( Deepseek query string: Which college institution of India ranks in the top 150 among world's best college institutions in 2024 )
 
 
 

உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 3
 
8. குடும்பம் என்கிற கதம்பத்திலிருந்து அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகள் இருவரும் உதிரிப்பூக்களாக எஞ்சியிருப்பதாக இறுதிக்காட்சியில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் தலைப்புக்கு செய்த சிறப்பு.
9. படத்தின் நாயகர்களாக திகழும் இந்த இரண்டு குழந்தைகள்தான் கதையையும் திரைக்கதையையும் தீர்மானிக்கிறார்கள். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர்களை பேச அனுமதிக்காதது குறையாக பார்க்கிறேன்.
10. இசைஞானியின் இசை ஓவியம் போல் திரைப்படத்திற்கு தேவையான அழகிய நல்லுணர்வை வழங்குகிறது. “அழகிய கண்ணே” பாடலும் காட்சி அமைப்பும் காலத்தை வென்ற பாடலாக இன்றும் நிலைக்கிறது.
11. புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்றன்னையை பற்றி எந்த ஒரு விமர்சனமும் குறையும் பெரிதாக பேசப்படவில்லை. மாறாக ஆணாதிக்கத்தை பெரிதுபடுத்தி பெண்களை ஆண்கள் எப்போதும் கொடுமைப்படுத்துவார்கள் என்கிற பொது புத்தியில் பதிந்த புரிதலையே திரைப்படமும் எதிரொலிக்கிறது. ஏன் சிற்றப்பன் எல்லாம் கொடுமை செய்ய மாட்டார்களா ? அவர்களுக்கு அம்மாதிரியான எண்ணம் தோன்றாதா ?வில்லத்தனத்தை சித்தி மட்டும் தான் காட்டுவாரா ? என்கிற கேள்வி எல்லாம் புதுமைப்பித்தனிடம் கேட்க வேண்டும். சிறுகதை ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு கதையை அமைத்துள்ளார். அதைப்போலவே நாமும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்கிற புரிதலுக்கு ஆசிரியர் உதாரணமாக திகழ்கிறார்.
12. இரண்டாவது மனைவியாக வருபவர் கணவனின் முதல் மனைவியின் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க தவறுகிறார். அதை சுட்டிக்காட்டிய கணவனுக்கு மழுப்பாலான பதிலை தருகிறார். அதை ஒரு குற்றம் குறையாகவே அவர் கருதவில்லை. இங்கே பெண்ணியம் பார்க்க தேவையில்லை. "பெண்கள் தான் குழந்தைகளை பார்க்க வேண்டும், ஆண்கள் பார்க்க வேண்டாமா ?" என்கிற கேள்விக்கு பொருள் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் கணவன் மனைவி யார் கடமையிலிருந்து தவறினாலும் அது தவறே. கணவன் கதாபாத்திரத்தை ஏற்கனவே வில்லனாக சித்தரித்து விட்டார்கள். அதனால் இயக்குனர் சரியான முறையில் தான் இத்தருணத்தை கையாண்டு இருக்கிறார்.
13. இரண்டாவது மனைவி தன் கணவனின் குழந்தைகளை பராமரிக்காதது பெரும் குறையாக கருதாது முதல் மனைவியின் தங்கையை கணவன் மான பங்கம் செய்வதை கண்டறிந்த உடன் எந்த ஒரு பெண்ணும் இதை அனுமதிக்க மாட்டாள் என்று வீர வசனம் பேசிய பிறகு கணவனை வெறுத்து விடும் அளவிற்கு ஒரே வினாடியில் மாறிவிடுகிறார். அதாவது தனது மனைவி பதவிக்கு ஒரு பங்கம் என்றால் அது குற்றம், அதுவே தான் தாய் ஸ்தானத்திலிருந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கடமையிலிருந்து தவறினால் அது குற்றமில்லை என்கிற மனோபாவம் தான் இதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு இயல்பாகவே தன்னல உணர்வு ஆண்களை விட அதிகம். அதைத்தான் இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதாக புரிந்து கொள்கிறேன். எவ்வாறு சாதி உணர்வும் இன உணர்வும் மொழி உணர்வும் நம் ரத்தத்திலேயே கலந்து அதை தவறு இல்லை என்கிற அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறோமோ அதே போலத்தான் பெண்களுக்கு இயல்பாகவே உள்ள தன்னல உணர்வினால் விளையும் தவறுகளையும் அவர்களை புண்படுத்தாதவாறு வசதியாக மறந்து விடுகிறோம்.
14. அடுத்த வீட்டு பிரச்சனை நம்மை பாதிக்காத வரை அது நம் பிரச்சனை கிடையாது என்கிற மனோபாவமே பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் இருந்து வருகிறது. அது ஏதோ இன்று நேற்று வந்தது கிடையாது. எண்பதுகளில் இத்திரைப்படம் வந்திருந்தாலும் அக்கால கட்டத்திலும் இதுவே தான் கதை. இறுதிக் காட்சியில் ஊரே திரண்டு வந்து மேலாளரை தாக்க வருவதாக காட்சிப்படுத்தியிருப்பதை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதால் அதையெல்லாம் நம்பத் தேவையில்லை.
15. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹாஜா செரிபை பெயரிடும் தருணத்தில் 'ராஜா' என்று அழைத்துள்ளனர். அதற்கான காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
நன்றி வணக்கம்.
 

உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 2
 
1. முதல் மனைவியை நோயாளி என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு காட்சியில் கூட ஏதோ ஒரு நோய் தாக்கியதைப் போல் இருமலோ காய்ச்சலோ இன்றி முழு மேக்கப்புடன் அமைதியே உருவான திடகாத்திரமான பெண்ணாக வலம் வருகிறார். இறுதியில் இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் படுத்த படுக்கையாகி இறந்து போவதாக காட்சிப்படுத்தியிருப்பது அவரது ஆரோக்கியத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.
2. வீட்டில் தண்டசோறு சாப்பிடும் வழக்கம் ஆண்களுக்கே உரிய பழக்கம் என்று கூறி பழக்கப்பட்ட சமூகத்தில் முதல் மனைவியின் தங்கை ஊரில் எந்த ஒரு வேலையும் செய்யாது அக்காவின் கணவர் சம்பளத்தில் அவர் வீட்டில் இல்லாத போது தண்டசோறு சாப்பிடும் படியான காட்சி அமைப்பு புதிதாக இருந்தது.
3. அரசுப்பள்ளி மேலாளர் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் ஏன் அவ்வாறான வன்குணத்தை பெற்றிருந்தார் என்பதற்கான காரண காரியங்களை விளக்காமல் விட்டிருப்பது குறையாக பார்க்கிறேன். ஓரிரு காட்சியில் அவரது பெற்றோர்களின் குடும்பப் பின்னணியையும் வளர்ப்பு முறையையும் விளக்கி இருந்தால் அவரது கதாபாத்திரத்திற்கு மேலும் பலத்தை சேர்த்திருக்கும்.
4. தங்கையை திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை மேலாளருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் காட்சியில் ஊரில் உள்ள பிராமணன் மற்றும் முடி திருத்தம் செய்யும் நாவிதன் போன்றோர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி கூறிய பிறகு மேலாளரின் பெயரை கடைசியாக சொல்லி கொடுப்பது மேலாளர் மீது எந்த அளவிற்கு வெறுப்பை வைத்திருந்தார் என்பதை பார்வையாளனுக்கு கடத்தும் வகையில் இயக்குனர் செய்திருப்பது சிறப்பு.
5. இறுதிக் காட்சியில் மேலாளர் ஆற்றில் விழுந்து இறந்து போவதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நேரடியாக காட்சிப்படுத்தாமல் ஊர் மக்களின் உணர்வு போராட்டத்தை மட்டுமே காட்டி இயக்குனர் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
6. முதல் மனைவியான அக்கா இறந்த பின் குழந்தைகளை சரியான முறையில் கவனிக்காததால் மேலாளரை கண்டிப்பதற்காக தங்கை வருகிறார். அக்காட்சியில் தங்கையின் வசைச்சொற்கள் பின்னணியில் ஒலிக்க ஊர் மக்கள் அவரை கைகூப்பி வணங்குவது போன்று காட்சிப்படுத்தியிருப்பது குடும்பத்திற்குள் எவ்வளவு இழிவாக அவரை நடத்தினாலும் ஊரில் அவருக்குரிய மரியாதை கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது என்கிற நகைமுரனை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. இயக்குனர் வேண்டுமென்றே இப்படி செய்யாவிட்டாலும் திரைப்படத்தின் எடிட்டர் என்கிற முறையில் பி.லெனின் அவர்களின் திறமையான பணி வியக்க வைக்கிறது.
7. ஒவ்வொரு நாள் காலையிலும் கதிரவனை கண்ட மகிழ்ச்சியில் பூக்கள் மலர்கின்றன. நறுமணத்தையும் அழகையும் பிறருக்கு அளித்து தம்மை சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்தளித்து தனது ஒரு நாளை பெரும் ஆரவாரத்துடன் அவை கடக்கின்றன. மாலையில் வாடி வதங்கி இறந்து போகையில் எந்த ஒரு துயரமும் துக்கமுமின்றி இறக்கின்றன. தினந்தோறும் பூக்கள் ஓர் வாழ்க்கைப்பாடத்தை மனிதர்களுக்கு நடத்திக் கொண்டே இருக்கிறது. மனிதர்களாகிய நாம் தான் அதை கவனிக்காமல் கடந்து செல்கின்றோம். பூக்களைப் போன்று நாமும் நம் வாழ்நாளை மகிழ்ச்சியோடு கழித்து பெருமாராவாரத்துடன் நாம் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்து இறக்கும் தருவாயில் எந்த ஒரு குற்றங்குறையுமின்றி இறந்து போக வேண்டும் என்கிற செய்தியே மனிதர்களாகிய நாம் பூக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்படத்தின் வாயிலாக இயக்குனர் தெரிவிப்பதாக புரிந்து கொள்கிறேன்.
 
 

உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 1
 
ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஒரு பெண்மணி இரு சிறுவர்களுடன் பயணிப்பதை கவனிக்கிறார். அப்போது அச்சிறுவர்களில் ஒருவன் தன் அம்மாவிடம் ஆர்வமாக ஏதோ ஒரு தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கையில் அந்த அம்மா கவலை தோய்ந்த முகத்தில் எந்த ஒரு முகக்குறியையும் காட்டாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கண்டு வியப்புற்று அதை அடிப்படையாகக் கொண்டு தனது முதல் திரைப்படத்தின் நாயகியின் கதாபாத்திரத்தை வடிவமைக்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகபாவனைகளையும் உணர்வுகளையும் கவனித்தாலே அதிலிருந்து பல நூறு கதைகளை உருவாக்கி விடலாம் என்கிற கருத்தை உடையவர் ஒருவரால் மட்டுமே உண்மை உணர்வுள்ள கதைகளை உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.
கதைச்சுருக்கம்
கிராமத்தில் இயங்கி வரும் ஓர் அரசு பள்ளியின் மேலாளராக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் வருபவரான விஜயன் வருகிறார். தனக்கு கீழ் பணி புரியும் எந்த ஒரு ஆசிரியர் மீதும் மதிப்பும் மரியாதையும் அற்று சர்வாதிகார ஆட்சி செய்து வருகையில் புதிதாக ஒரு ஆசிரியர் கிராமத்திற்கு வருகிறார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு கிடைத்தாலும் பல கிராமங்களில் வெள்ளையனின் அடக்குமுறை ஆட்சியை இன்றும் ஏதோ ஒரு இந்தியன் மறக்காமல் பின்பற்றி வருவது கிராமங்களில் உள்ள பல்வேறு சாபக்கேடுகளில் ஒன்றாகும் என்கிற வசனம் அந்த ஊரில் நிலவிவந்த முன் கதைச் சுருக்கத்தை தெளிவாக உரைக்கிறது.
தொடர்ந்து, அரசுப்பள்ளி மேலாளரின் குடும்பப் பின்னணிக்குள் திரைப்படம் விரிகிறது. அவருக்கு ஒரு மனைவியும் மகனும் கைக்குழந்தையான மகளும் உள்ளனர். நோயாளியான மனைவிக்கு ஒரு தங்கையும் ஊரில் பெரும்பாலான நபர்களிடம் கடன்களைப் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கித் தவிக்கும் தந்தையும் உள்ளனர்.
மேலாளர் தான் நினைப்பதே சரி என்று நினைக்கும் குணம் கொண்டவர். இம்மாதிரியான ஆட்களிடம் கவனமாக பழக வேண்டும். வன்மையான பல குணங்கள் அவர்களிடம் நிறைந்திருந்தாலும் அவ்வப்போது சில நல்ல குணங்களும் வெளிப்படும். அதைப் பற்றிக் கொண்டே நாம் அவர்கள் போக்கில் சென்று அவர்களிடம் பழகுவதே நம் மரியாதைக்கு சிறப்பு சேர்க்கும். அவ்வாறே ஊர் மக்களும் அவரது குடும்பத்தினரும் மிகவும் கவனமாக அவரிடம் பழகுகின்றனர்.
ஆணாதிக்கத்தில் ஊறி திளைத்தவரான மேலாளருக்கு மனைவியின் தங்கையின் மீது விருப்பம் உள்ளது. சீக்கிரமே தன் மனைவி இறந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் தங்கையை இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறார். அதை தன் மனைவியிடமும் மாமனாரிடமும் தெரிவிக்கிறார். அதற்கு அவர்கள் உடன்படாததால் வெளியூரில் உள்ள ஓர் பணக்கார வீட்டு பெண்ணை மனைவி இறந்த பின் தன் தாயின் தூண்டுதலின் பேரில் மறுமணம் செய்து கொள்கிறார்.
இதன் விளைவாக, தங்கையின் வாழ்க்கையில் எந்த ஒரு இடையூறும் மேலாளர் விளைவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கை உருவானதால் ஊருக்கு புதிதாக வந்த பள்ளி ஆசிரியரை திருமணம் செய்ய தங்கை ஒப்புக் கொள்கிறார். அதேசமயம் தனது அக்காவின் குழந்தைகளை தம்முடனே வளர்க்கவும் திட்டமிடுகிறார். மேலும் புது மாப்பிள்ளையும் மேலாளரின் கீழ் பணி செய்ய விரும்பாததால் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்ததோடு மேலாளர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக தமிழக அரசுக்கு கடிதம் மூலம் மேலாளர் அது வரை செய்து வந்த ஊழலை சுட்டிக்காட்டி அவர் மீதான நடவடிக்கை எடுக்க போதுமான செயல் திட்டத்தை வகுத்த தகவலை திருமண பத்திரிக்கை கொடுக்கும் வேளையில் தெரிவிக்கிறார்.
என்னதான் மேலாளருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று இருந்தாலும் முதல் மனைவியின் தங்கையின் மீதுள்ள விருப்பம் இன்னும் அடங்கவில்லை. மேலும் தனது குழந்தைகளும் தன்னை விட்டு பிரிவதை விரும்பவில்லை. புது மாப்பிள்ளையின் மிரட்டலுக்கு பயந்து தனக்கு கிடைக்காவிட்டாலும் வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் மைத்துனியை மானபங்கம் செய்து விடுகிறார். இதைக் கண்ட இரண்டாவது மனைவியும் அவரை வெறுத்து விடுகிறார்.
தகவல் அறிந்த ஊர் மக்கள் அவரை கொல்ல முற்றுகையிடுகின்றனர். இறுதியில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
தந்தையையும் தாயையும் இழந்த குழந்தைகள் குடும்பம் என்கிற கதம்பத்தில் மிஞ்சி இருக்கும் உதிரிப் பூக்களாக நிற்பதோடு திரைப்படம் நிறைவடைகிறது.

Locations of visitors to this page