Wednesday, November 06, 2024

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 10

1. கடிமா முலிலோ என்ற நகரம் நமீபியாவில் அமைந்துள்ளது, ஜாம்பியாவில் இல்லை. இருப்பினும், கதிமா முலிலோ ஜாம்பியாவின் எல்லைக்கு அருகில் உள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையில் அதன் இருப்பிடம் குறித்து சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

2. நமீபியாவின் கடிமா முலிலோவிலிருந்து ஜாம்பேசி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு ஜாம்பியன் நகரம் செஷேக். Sesheke மற்றும் Katima Mulilo வெவ்வேறு நாடுகளில் உள்ள தனித்தனி நகரங்கள் என்றாலும், அவை வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் கடிமா முலிலோ பாலம் வழி பயணம் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

3. கடிமா முலிலோ மற்றும் செஷேக் இடையேயான பாலம் நமீபியாவிற்கும் சாம்பியாவிற்கும் இடையில் சரக்குகள் மற்றும் மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குகிறது. ஜாம்பேசி நதி இயற்கையான எல்லையாக செயல்படுகிறது, ஆனால் பாலம் பயணத்தை எளிதாக்குகிறது.

4. Higer என்பது நம்பகமான, நீண்ட ஆயுள் கொண்ட பேருந்துகள் மற்றும் பெட்டிகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற சீன பேருந்து தயாரிப்பு நிறுவனமாகும். ஜிம்பாப்வேயில், ஹைகர் பேருந்துகள் மலிவு விலை, நவீன வடிவமைப்பு மற்றும் நீண்ட தூரப் பயணங்களைக் கையாளும் திறன் ஆகியவற்றின் காரணமாக பிரபலமடைந்துள்ளன. அவை பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் ஆப்பரேட்டர்களின் விருப்ப தேர்வாக அமைகின்றன.

5. Birds Park: ஹராரேயில் உள்ள பறவை பூங்கா, குய்ம்பா ஷிரி பறவை பூங்கா என்று அழைக்கப்படுகிறது, இது ஹராரேவுக்கு வெளியே 30 கிமீ தொலைவில் சிவெரோ ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான பறவைகள் சரணாலயமாகும். இது பறவை பிரியர்களுக்கு நன்கு அறியப்பட்ட இடமாகும், இது பரந்த அளவிலான பறவை இனங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் பல ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவை மற்றும் உலகில் உள்ள பல அரிய வகை பறவை இனங்களையும் இங்கே காணலாம்.

6. Bateleur என்பது ஆப்பிரிக்காவில், குறிப்பாக சஹாரா அல்லாத பகுதிகளில் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான பறவையாகும். இது அதன் வண்ணமயமான தோற்றம் மற்றும் தனித்துவமான பறக்கும் தன்மைக்காக அறியப்படுகிறது.

7. ஜிம்பாப்வேயின் $100 பணத்தாளில் Bateleur கழுகு சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம்பாப்வே நாட்டு மக்களின் பரம்பரை சின்னமாகவும் பேட்லூர் கழுகு சேர்க்கப்பட்டுள்ளது. இது வலிமை, சுதந்திரம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கான நாட்டின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. சிம்பாப்வே நாட்டு மக்களின் பரம்பரை சின்னத்தில் (Coat of Arms) கழுகு இருப்பது ஜிம்பாப்வேயின் இயற்கை பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

8. Lion's Park ஹராரேக்கு வெளியே புலவாயோ சாலையில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து பிரபலமான ஒரு நாள்-பயண இடமாக விளங்குகிறது.

9. ஜிம்பாப்வேயில் 70 முதல் 80 தமிழர்கள் வாழ்கிறார்கள். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வாழ்கிறார்கள்.

10. ஹராரே நகரில் உள்ள இந்து கோவில் - ஹரே கிருஷ்ணா கோவில் (ISKCON Harare), இந்து சமுதாயத்திற்கான புனித தளமாகவும், ஆன்மீக மற்றும் கலாச்சார மையமாகவும் செயல்படுகிறது.

11. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் என்பது பல ஆப்பிரிக்க நாடுகளின் சுற்றுலா சுகாதாரக் கொள்கையின் ஒரு முக்கிய ஆவணமாகும். இது பயணிகள் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) எனும் கொசுக்களால் பரவக்கூடிய வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளதை நிரூபிக்கிறது. சில ஆப்பிரிக்கா நாடுகள், மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு இல்லாத பகுதிகளாக இருந்தாலும், மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த சான்றிதழை கேட்கலாம்.

12. ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பு, நீங்கள் செல்லும் நாட்டின் சுகாதார தேவைகளை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் இவை உள்ளூர் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாறுபடக்கூடும். WHO மற்றும் CDC போன்ற அமைப்புகள், இந்த விதிகளைப் பற்றிய தெளிவான தகவல்களை வழங்குகின்றன.

13. மன்யாரா ஏரி (Lake Manyara) என்பது தான்சானியா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஏரியாகும். இது தான்சானியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.

14. மன்யாரா ஏரி தான்சானியாவின் பெரிய பிளவு பள்ளத்தில் (Great Rift Valley) அமைந்துள்ளது. இது அருஷா நகரம் மற்றும் நோரோஙொரோ பள்ளத்தாக்கு (Ngorongoro Crater) இடையில் அமைந்துள்ள முக்கிய பகுதியாகும்.

15. மன்யாரா ஏரி ஒரு சோடா ஏரி ஆகும், அதாவது இதன் நீர் அதிக ஆல்கலைன் தன்மை கொண்டது. இதனால் ஏரியின் நீரில் ஒரு குறிப்பிட்ட வகை பாசி (algae) வளர்க்கப்படுகிறது, இது பட்டாம்பூச்சிகளை பெரிதும் ஈர்க்கிறது.

16. மொத்தத்தில், மன்யாரா ஏரி தான்சானியாவில் உள்ள ஒரு அழகிய மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாகும், இது இயற்கை, விலங்குகள், மற்றும் பறவைகளை நேசிப்பவர்களுக்கு நெருக்கமான இடமாகும்.

17. கென்யா தலைநகரம் நைரோபியிலிருந்து மும்பைக்கு செல்லும் கென்யா ஏர்வேஸ் விமானம் பல சமயங்களில் ரத்தாகும் சூழல் நிலவுகிறது. மும்பைக்கு ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள் செல்கின்றன. மாலை 4 முக்காலுக்கு ஒன்றும் இரவு 9 முக்காலுக்கு ஒன்றும் என்று இரு விமானங்கள் செல்கின்றன. பல சமயங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் இரு விமானங்களை ஒரே விமானமாக இரவு 10 மணிக்கு ஒன்றாக இணைத்து அனுப்புகின்றனர். அதனால் மாலை நான்கே முக்கால் மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகும் சூழ்நிலை நிலவுகிறது.

16. பொதுவாக ஏர்டெல் போஸ்ட் பெய்டு சந்தா வைத்திருப்பவர்கள் இந்தியாவிற்குள் வெளிநாட்டிலிருந்து மீண்டும் திரும்புகையில் சில சமயம் வேலை செய்யாது. திரும்பவும் ஏர்டெல் சிம் கார்டை மறு உயிர்பிக்க வேண்டி ஏர்டெல் கடைக்கு செல்ல வேண்டி வரும். முன் முயற்சியாக கைபேசியை ஆப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்து பார்க்கலாம்.

முற்றும்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 9

1. ஆப்பிரிக்காவின் சாகச தலைநகரமாக விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது.

2. உலகில் ஏழு இயற்கையாக அமைந்த அதிசயங்கள் உள்ளன. அவை 1) அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு Grand Canyon. 2) ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய பவளப் பாறைகள் The Great Barrier Reef , 3) நேபாளில் உள்ள எவரெஸ்ட் சிகரம், 4) ஆர்க்டிக் வளைவில் உள்ள அரோரா Borealis, 5) பிரேசில் தலைநகரமான ரியோடி ஜெனி ரோவில் உள்ள துறைமுகம், 6) மெக்சிகோவில் உள்ள Paricutin எரிமலை, 7) இறுதியாக ஜிம்பாப்வே-ஜாம்பியா எல்லையில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது.

3. விக்டோரியா நீர்வீழ்ச்சி நுழைவு கட்டணமாக 50 அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் ஜிம்பாப்வே மக்களுக்கு வெறும் ஏழு டாலர் தான். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் அண்டை நாடுகளில் வசிப்பவர்களுக்கு 20 டாலர்கள்.

4. சாம்பியாவில் உள்ள மலைகளில் கிளம்பும் Zambezi நதி பல்வேறு கிளை நதிகளின் சங்கமத்தில் 2500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து இந்திய பெருங்கடலில் கலக்கிறது. அதன் நடு பயணத்தில் அதாவது 1200 கிலோமீட்டர் தூரத்தில் விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது. பள்ளத்தாக்கில் விழும் நீர்வீழ்ச்சி மொசாம்பிக் நாட்டுக்குள் புகுந்து இறுதியில் இந்திய பெருங்கடலில் கலக்கிறது.

5. 19 ஆம் நூற்றாண்டில் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் 1855இல் விக்டோரியா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தார். இவர் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு இங்கிலாந்து ராணியின் பெயரை சூட்டினார்.

6. அதிக உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சியாக வெனிசுவேலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைகிறது. ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.

7. உலகிலேயே அகலமாக விழும் நீர்வீழ்ச்சியாக தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் உள்ள Khone Phapheng நீர்வீழ்ச்சி அமைகிறது. 10 கிலோமீட்டர் அகலத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

8. 1.7 கிலோ மீட்டர் அகலம் கொண்ட விக்டோரியா நீர்வீழ்ச்சியின் 1.2 கிலோமீட்டர் ஜிம்பாவேயிலும் இதர 500 மீட்டர் சாம்பியாவிலும் உள்ளது.

9. Victoria நீர்வீழ்ச்சியின் அதிகபட்ச உயரம் 108 மீட்டர்கள் ஆகும்.

10. தண்ணீரின் கொள்ளளவை கணக்கில் கொண்டால் விக்டோரியா நீர்வீழ்ச்சியே உலகிலேயே அதிக அளவிலான தண்ணீரை கொண்ட நீர்வீழ்ச்சி என்று பெருமை பெறுகிறது. அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை விட இரண்டு மடங்கு அதிக உயரமும் ஒன்றரை மடங்கு அதிக அகலமும் கொண்டது.

11. விக்டோரியா நீர்வீழ்ச்சியின் 75% ஜிம்பாப்வே பகுதியிலிருந்து காணலாம். நீர்வீழ்ச்சியின் 25 சதவிகிதமே ஜாம்பியாவிலிருந்து பார்க்க முடியும். ஆகவே விக்டோரியா நீர்வீழ்ச்சியை நன்றாக கண்டு ரசிக்க ஜிம்பாப்வே தான் மிகச் சிறந்த இடமாக விளங்குகிறது.

12. ஜிம்பாப்வேவிற்கும் சாம்பியாவிற்கும் இயற்கையாக அமைந்த எல்லையாக விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது.

13. நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சியைக் காண உகந்த மாதங்கள் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை.

14. சாம்பியாவில் இருந்து நீர்வீழ்ச்சியின் 25 சதவீதத்தையே பார்க்க முடிந்தாலும் நீர்வீழ்ச்சி தொடங்குவதற்கு முன் Devil's pool என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதன் மூலம் நீர்வீழ்ச்சி விழுவதற்கு முன் உள்ள பாறையில் இருந்து தண்ணீரில் மிதந்த வாரே நீர்வீழ்ச்சி விழுவதை காணலாம்.

15. 1989இல் விக்டோரியா நீர்வீழ்ச்சி இயற்கையாக அமைந்த உலக பாரம்பரிய தளமாக ஐநா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

16. ஜிம்பாப்வேயின் பெரிய சிதலமடைந்த பகுதியை (Great Zimbabwe Ruins) கலாச்சார ரீதியாக பாரம்பரிய தளமாக ஐநா அமைப்பு அங்கீகரித்துள்ளது.

17. ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் ஆங்கிலேயர்கள் வைத்த பல்வேறு இடங்களின் பெயர்களை தங்களது சொந்த மொழியில் உள்ள பெயரில் மாற்றி அமைத்தார்கள். ஆனால் விக்டோரியா நீர்வீழ்ச்சியை மட்டும் எந்தவித பெயர் மாற்றமும் இல்லாமல் இன்று வரை தொடர்கிறது. அதற்கான காரணம் விக்டோரியா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவரான லிவிங்ஸ்டன் மீதான மதிப்பும் மரியாதையும் ஆகும்.

18. உலகிலேயே Moonbow பார்க்க இரண்டு இடங்கள்தான் மிகவும் முக்கியமானது. அதில் விக்டோரியா நீர்வீழ்ச்சியும் ஒன்று. ரெயின்போ மாதிரியே நிலவின் வெளிச்சம் நீர் வீழ்ச்சியின் தண்ணீரில் பட்டு தெறிக்கும் ஒளியின் அழகை Moonbow என்று அழைப்பார்கள். இந்த அற்புதக் காட்சியினை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் இரட்டிப்பாக உள்ளது. அதாவது 100 டாலர்கள் செலுத்திய பின்பே இந்த அற்புதக் காட்சிகளை வெளிநாட்டினர் பார்க்க இயலும்.

19. பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை அதிகமாக தண்ணீர் விழுவதால் மிகவும் அதிகமாக சாரல் இருப்பதால் பார்வையாளர்களுக்கு அருமையான காட்சியை பார்க்க முடியாமல் போகலாம் அதனால் நீர்வீச்சியை பார்ப்பதற்கு உகந்த மாதங்கள் மே முதல் ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்கள்.

20. ஜிம்பாப்வே பகுதியிலிருந்து பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 50 டாலர்கள் செலவாகும். அதுவே சாம்பியாவிலிருந்து பார்த்தால் 20 டாலர்களில் பார்த்து விடலாம்.

21. ஹெலிகாப்டர் பார்வையிலிருந்து பதினைந்து நிமிடங்களில் பார்க்க 100 முதல் 150 டாலர்கள் வரை செலவாகும். சிறிய ரக மைக்ரோ விமானம் மூலமாகவும் பார்வையிடலாம்.

22. Zambezi நதியில் வேகமாக பயணித்துக் கொண்டே நீர்வீழ்ச்சியை பார்ப்பது அற்புத அனுபவமாக இருக்கும். Zimbabwe இல் இந்த படகு பயணத்திற்கு 130 டாலர்கள் செலவாகும். உலகிலேயே வேகமாக செல்லும் படகில் பயணிப்பதில் (River Rafting) நேபாள் முதலிடம் வகிக்கிறது.

23. விக்டோரியா நீர்வீழ்ச்சி அருகே ஒரு பாலம் உள்ளது. அதுதான் ஜிம்பாப்வேயையும் ஜாம்பியாவையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. 1905-1910 இடையிலான ஆண்டுகளில் இந்த பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ஜிம்பாப்வேவிற்கு எடுத்து வந்து ஒருங்கிணைத்தனர்.

24. Upper Zambezi நதி என்றும் பள்ளத்தாக்கில் விழுந்த பிறகு Lower Zambezi நதியாகவும் பயணிக்கிறது.

25. தண்ணீர் குறைவாக பாயும் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இருக்கும். சாம்பியா பகுதியில் மிகவும் குறைவான தண்ணீரே காணப்படும். அப்படி இருந்தும் ஜிம்பாப்வே பகுதியில் மிதமான அளவு தண்ணீர் பாய்ந்து கொண்டே இருக்கும்.

26. ஜிம்பாப்வேயில் இருந்து விக்டோரியா நீர்வீழ்ச்சியை ஹெலிகாப்டர் சவாரி மூலம் பார்வையிடுவதற்கு சுமார் 175 டாலர்கள் செலவாகும்.

27. விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் உள்ள நகரம் ஜிம்பாப்வேயில் அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி டவுண் ஆகும். பயணிகள் தரையில் இருந்து நீர்வீழ்ச்சியைப் பார்க்க அல்லது சுற்றியுள்ள மழைக்காடுகளை ஆராய அருகிலுள்ள நகரமான Livingstone லிவிங்ஸ்டோனுக்கு (சாம்பியாவில் அமைந்துள்ளது) பயணிக்க வேண்டியிருக்கும்.

28. 2,574 கிமீ (1,599 மைல்) தூரம் பயணிக்கும் ஜாம்பேசி நதி சாம்பியாவில் எழுகிறது மற்றும் கிழக்கு அங்கோலா வழியாக, நமீபியாவின் வடகிழக்கு எல்லை மற்றும் போட்ஸ்வானாவின் வடக்கு எல்லை வழியாக பாய்கிறது, பின்னர் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வேக்கு இடையேயான எல்லையில் கடந்து மொசாம்பிக் வரை பாய்கிறது. இறுதியில் இந்தியப் பெருங்கடலுக்குள் கலக்கிறது.

29. ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஆன்மீக பரப்புரையாளரும் ஆய்வாளருமான டாக்டர். டேவிட் லிவிங்ஸ்டோன் 1855 ஆம் ஆண்டில் நீர்வீழ்ச்சியைக் 'கண்டுபிடிப்பதற்கு' நீண்ட காலத்திற்கு முன்பே, உள்ளூர் படோங்கா மக்கள் நீர்வீழ்ச்சியை Mosi-oa-Tunya 'இடி முழக்கும் புகை' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 8

1. ஜிம்பாப்வேயின் கோடைகாலமான டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரை அதிக மழை பொழிவு இருக்கும்.

2. ஜிம்பாப்வேயில் இரண்டு டாலர் பணத்தாள் புழக்கத்தில் உள்ளது. அமெரிக்காவிலேயே இரண்டு டாலர் பணத்தாள் கண்ணில் படாத போது ஜிம்பாப்வேயில் கிடைப்பது வியப்பாக உள்ளது.

3. ஜிம்பாப்வேயில் ஹராரேவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நகரம் புலவாயோ, மஸ்விங்கோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஹாரரேவிலிருந்து 300க்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மஸ்விங்கோ.

4. புலவாயோ ஜிம்பாப்வேயின் முக்கிய தொழில் மைய நகரமாகும். அதன் முக்கிய உற்பத்தி துறைகள் - ஆட்டோமொபைல்கள், டயர்கள், கான்கிரீட் மற்றும் பிற கட்டுமான பொருட்கள், ரேடியோக்கள், தொலைக்காட்சி பெட்டிகள், ஜவுளி மற்றும் உணவு ஆகும்.

5. ஜிம்பாப்வே இரயில்வேயின் தலைமையகமாக விளங்கும் புலவாயோ, தென்னாப்பிரிக்காவிற்கு கொண்டு செல்ல மற்றும் அங்கிருந்து அனுப்பும் பொருட்களை பாதுகாத்து வைக்க உதவும் முக்கிய இடமாற்று பகுதியாகும். இந்த நகரம் ஒரு கட்டத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது மற்றும் தோற்றத்தில் நவீனமானது, பரந்த தெருக்கள் மற்றும் பல புதிய கட்டிடங்கள், இரண்டு ஆசிரியர் கல்லூரிகள், ஒரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

6. புலவாயோவை ராஜாக்களின் நகரம் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

7. 1840களில் தென்னாப்பிரிக்காவின் ஜூலுலாந்தில் (Zululand) இருந்து டெபிலி (Ndbele) இன மக்கள் பெரும் மலையேற்றத்திற்குப் பிறகு நவீன ஜிம்பாப்வேயில் குடியேறிய Mzilikazi மஜிலிகாசி மன்னரின் மகன் Lobengula லோபெங்குலா என்ற Ndbele இன மன்னரால் புலவாயோ நகரம் நிறுவப்பட்டது.

9. புலவாயோ என்ற பெயர் isiNdebele வார்த்தையான KoBulawayo என்பதிலிருந்து வந்தது, அதாவது 'அவர் கொல்லப்படும் இடம்' என்று பொருள்படும். நகரம் உருவான நேரத்தில், Ndebele குலங்களுக்கிடையே 'உள்நாட்டுப் போர்' இருந்ததாக கருதப்படுகிறது. இளவரசர் லோபெங்குலாவுடன் ஒத்துப்போகாத டெபிலி (Ndebele) குழு அவருடன் சண்டையிட்டது, ஏனெனில் அவர் அரியணைக்கு சரியான வாரிசு இல்லை என்று அவர்கள் உணர்ந்தனர், எனவே லோபெங்குலா தனது தலைநகருக்கு 'அவர் (இளவரசர்) அங்கே கொல்லப்படுகிறார்' என்று பெயரிட்டார். அந்த நேரத்தில் லோபெங்குலா தனது தந்தையின் (Mzilikazi) சிம்மாசனத்தில் அமர்வதற்காக போராடும் இளவரசராக இருந்தார்.

http://www.zimbabweconnections.com/bulawayo-city-2/

10. ஜிம்பாப்வேயில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினந்தோறும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலைமை உள்ளது. புலவாயோவில் பெரும்பாலும் இரவு நேரத்தில் தெருக்களில் மின்விளக்குகளே இருக்காது.

11. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புலவாயோவில் இருந்து அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு ரயில் மூலமாகவே சரக்கு போக்குவரத்திற்காக ரயில் உபயோகப்படுத்தப்பட்டது. தற்போது ரயில்வே நிர்வாகம் மூடப்பட்டதால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 2001 முதல் 2006 வரை மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே நிர்வாகம் இருந்தது. மக்களும் பயணித்து வந்தனர். மீண்டும் 2017 முதல் கோவிட் காலம் வரை மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோவிட் காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. 2021 மீண்டும் திறக்கப்பட்டது. 2023 முதல் மீண்டும் மறு தேதி அறிவிக்கப்படாமல் மூடப்பட்டது. புலவாயோவில் இருந்து ஹராரேவிற்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கும் மொசாம்பிக்கிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் சாம்பியாவிற்கும் ரயில் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

12. 1893 இல் Rhodesia ரயில்வே என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1980 இல் National Railways of Zimbabwe என்று தனியார் வசம் இருந்த ரயில்வே நிர்வாகம் ஜிம்பாப்வே அரசின் கீழ் மாற்றப்பட்டது. குட்வின் முர்ரே என்பவர் தான் தற்போது ரயில்வே அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறார்.

13. தென் ஆப்பிரிக்காவில் குரூகர் (Kruger) தேசிய பூங்கா, சாம்பியாவில் தெற்கு லுவாங்வா (South Luangwa) பூங்கா, நமீபியாவில் (Etosha) எட்டொசியன் தேசியப் பூங்கா, இம்மூன்று பூங்கா தான் தெற்கு ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமானவை. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் உள்ள செரெங்கிடி (Serengity) தேசியப் பூங்கா மற்றும் கென்யாவில் உள்ள Masai Mara போன்ற பூங்காக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

14. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தற்போதுள்ள தலைநகரமான ஹராரேவிற்கு சாலிஸ்பெரி என்ற பெயர் இருந்தது. ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற பிறகு தங்களது பழங்குடி இன மொழியான சோனா மக்களின் தாய் மொழியில் நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. அதனால் ஹராரே என்று இன்று அழைக்கப்படுகிறது.

15. Botswana : 1966 இல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு போட்ஸ்வானா பெச்சுவானாலாந்து என்று அழைக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தது. இது உலகின் மிகவும் ஏழ்மையான மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகும். இந்த நாடு அதன் ஆதிக்க இனக்குழுவான Tswana ஸ்வானாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

16. 1901-இல் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஜிம்பாப்வேயின் Hwange நகரில் இருந்தது. அதன் பொருட்டு தென் ஆப்பிரிக்கா தலைநகரமான கேப்டவுனில் இருந்து எகிப்தின் தலைநகரமான கைரோ வரை செல்லும் ரயில் பாதையில் Hwangeவை கடந்துதான் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ரயில் வழி பாதை அமைத்திருந்தனர்.

17. ஹாரரேவில் 90 விழுக்காடு சோனா இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் புலவாயோவில் பெரும்பான்மையினராக டெபிலி (Ndbele) இன மக்கள் வாழ்கிறார்கள். ஜிம்பாப்வேயில் ஒட்டுமொத்தமாக 70% சோனா இன மக்களும் 20% Ndbele இன மக்களும் இதர பத்து சதவீதத்தினர் மற்ற இன மக்களும் வாழ்கிறார்கள்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எம்ஜிஆர் பாடல்கள்

எம்ஜிஆர் என்ற ஆளுமையை கட்டமைத்தது பாடலாசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தனி மனிதராக அவர் எவ்வாறான குண நலன்களை பெற்றிருந்தாலும் சினிமா என்ற பொதுத்தளத்தில் பொதுவான நல்ல கருத்துக்களையே மக்கள் மனங்களில் விதைத்துள்ளார். எந்த ஒரு தருணத்திலும் தவறான முன்னோடியாக தான் இருந்து விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்துள்ளார். அவரது களங்கமில்லாத முனைப்பே காலம் கடந்தும் அவரது புகழை இன்று வரை மங்காது ஒளிரச் செய்கிறது. அரசியலுக்கு வர துடிக்கும் தமிழ் திரை கலைஞர்கள் தம்மிடம் இந்த நற்குணங்கள் இருக்கிறதா (அ) இருந்ததா என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு பொதுக்களத்தில் நடமாடினால் நல்லது.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளதாக பின்வரும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஏதோ ஒரு பாடலில் மட்டும் சொல்லி விட்டு சென்று விடாமல் பல பாடல்களில் மீண்டும் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியிருப்பது பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற உதவி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான பூமி என்று பெயருமிட்டால்

இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்.” (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா)

"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமோ?

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

படைத்தவன் மேல் பழியுமில்லை

பசித்தவன் மேல் பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்

உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

பலர் வாட வாட சிலர் வாழ வாழ

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை"

“பொருள் கொண்ட பேர்கள்

மனம் கொண்டதில்லை

தரும் கைகள் தேடி

பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோயில்

திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே

தெய்வம் வந்து சேரும்

அழுதவர் சிரிப்பதும்

சிரிப்பவர் அழுவதும்

விதி வழி வந்ததில்லை

ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்

இறைவனும் தந்ததில்லை

புத்தன் யேசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக”

"நான் ஆணையிட்டால்" மாதிரியான கம்பீரமான, ஆண்மையான பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் வெளி வந்ததே கிடையாது என்று நினைக்கிறேன். எவ்வளவோ குத்து பாடல்கள் மற்றும் நாயக அறிமுக பாடல்கள் வெளிவந்திருந்தாலும் இந்தப் பாடலை மட்டும் இன்று வரையிலும் எந்த பாடலும் தோற்கடித்ததில்லை என்பது மட்டும் உண்மையான நிதர்சனம்.

யாருக்கும் தலைவணங்கி, அடிமையாக வாழ கூடாது என்ற கருத்தினையும் கொண்டிருந்தவராகவே தெரிகிறது. அதுவே பின் நாட்களில் அதிமுக தலைமையின் நாடித்துடிப்பாக மாறிப்போனது பல இன்னல்களில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காத்திருப்பதற்காகவே என்று நினைக்கிறேன்.

"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்"

என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான கவிஞர் வாலியே அதிமுக கட்சியினரின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தவர் என்ற பெருமை அடைகிறார்.

வளரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல் போதனைகள் வழங்கும் விதமாக பின்வரும் வரிகள் அமைகின்றன.

"தவறு என்பது

தவறி செய்வது

தப்பு என்பது

தெரிந்து செய்வது

தவறு செய்தவன்

திருந்த பார்க்கணும்

தப்பு செய்தவன்

வருந்தி ஆகணும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி"

தமிழ் திரைப்பாடல் வரிகள் எவ்வளவோ உடைந்து தேய்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் அதை காக்கும் பொருட்டு பின்வரும் வரிகள் அமைகின்றன.

"விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும் (2)

தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் (2)

ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் (2)

தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்"

"ஒய் திஸ் கொலவெறி" போன்ற பாடலை மிகப்பெரிய ஹிட் பாடலாக ஆக்கிய தமிழ் சமூகத்தினர் மேற்கூறிய பாடல் வரிகளை படித்து உணர்ந்தால் நல்லது. காலம் ஒரு சக்கரம் போன்றது. அன்றைய பாடல்கள் வரிகளுக்காகவே பெயர் பெற்றது. அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருக்கும் இன்று மீண்டும் வரிகளுக்காக சிறப்புறும் என்று எதிர்பார்ப்போமாக.

"எவ்வளவோ பாத்துட்டோம் இதை பண்ண மாட்டோமா?" என்கிற வசனத்தின் பாடல் வடிவம்தான் பின்வரும் வரிகள். இக்கட்டான சூழலில் பலர் நமக்கு தொல்லை கொடுத்தால் இந்த பாடலை பலமுறை கேட்டு தெளிவு பெறலாம்.

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளி வரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"

"பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு (2)

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே போராடு" (2)

பின்வரும் வரிகள் எதற்காக நாம் உண்மையாக பயப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறுகிறது.

"மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு (2)

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" (2)

எம்ஜிஆருக்கு தமிழ் திரையுலகம் அளித்த சலுகையை போன்று ரஜினிகாந்துக்கும் அளித்தது. பொது மக்களின் நெருக்கமான மனிதர்களான கூலித்தொழிலாளி, பால்காரன், கார் டிரைவர் போன்ற வேடங்களை ரஜினிகாந்துக்கு அளித்து அழகு பார்த்தது. எம்.ஜி.ஆருக்கும் ரஜினிகாந்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் முன்னவர் தன் அரசியல் கொள்கைகளை வலுவாக வகுத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களின் தன்மையை அமைத்துக் கொண்டார். பின்னவரோ எதற்காக தான் இந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தோம் என்பதை உணராமல் நடித்ததனால் எந்த ஒரு கொள்கை பிடிப்பும் இல்லாமல் அரசியல் கனவில் சுணங்கிப் போனார்.

தலைமுறை இடைவெளி என்று சொல்வார்கள். ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒரு முறை ஒரு தலைமுறையை கடந்து செல்கிறோம். தலைமுறை இடைவெளியில் சிக்கித் தவிக்கும் பல பேருக்கு பின்வரும் வரிகள் ஆறுதலாக அமைகிறது.

"பொய்யான

சிலபேர்க்கு

புது நாகரீகம்

புரியாத

பலபேர்க்கு

இது நாகரீகம்

முறையாக

வாழ்வோர்க்கு

எது நாகரீகம்

முன்னோர்கள்

சொன்னார்கள்

அது நாகரீகம்

முன்னோர்கள்

சொன்னார்கள்

அது நாகரீகம்

கண் போன

போக்கிலே

கால் போகலாமா

கால் போன

போக்கிலே

மனம்

போகலாமா? "

நன்றி வணக்கம்.

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 7

1. கிரேட் ஜிம்பாப்வே Ruins-இன் ஒரு பகுதியான கிரேட் Enclosure என்ற இடம் மன்னர் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த இடமாகும். வெளிப்புற மதில் சுவரின் உயரம் 32 அடி, கிரானைட் கற்களால் கட்டப்பட்டது, எங்குமே காரைப்பூசி இருக்க மாட்டார்கள். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்தார் போல் கட்டப்பட்டிருக்கும். Hill Complex பிறகு கட்டப்பட்ட கட்டிடம் என்று தொல்பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 12 முதல் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கணிக்கபடுகிறது.

2. 15 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கத்தினால் கனிம வளங்களின் சுரண்டல்கள் அதிகமாகி நாளடைவில் அவை தீர்ந்து போனதால் பெருவணிகம் தடைப்பட்டு கிரேட் ஜிம்பாப்வேயில் வாழ்ந்த மக்கள் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டதாக நம்பப்படுகிறது. மெக்சிகோவில் உள்ள மாயன் சமூகத்தினரும் இதே போன்று படிப்படியாக அவர்களது மக்கள் தொகையும் ஒரு காலகட்டத்திற்கு மேல் குறைந்துள்ளது. Zimbabwe 1980 இல் சுதந்திரம் பெற்ற பிறகு அரசு இந்த இடத்தை கையகப்படுத்தி பல்வேறு சீரமைப்பு பணிகள் இன்று வரையிலும் நடத்தி வருகிறது.

3. Valley காம்ப்ளக்ஸில் 13 லிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அதிகபட்சமாக 10 ஆயிரம் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

4. Great Zimbabwe Ruins-இல் கிடைக்கப்பெற்ற அரிய வகை பொருட்களை தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

5. கிரேட் ஜிம்பாப்வேயின் கிழக்கு இடிபாடுகளில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், முஜேஜே (Mujejeje) என்று அழைக்கப்படும் இயற்கையான Quartz கனிமங்களை கொண்ட நிலப்பரப்பு, Granite கட்டிடங்களின் காலடியில் உள்ளது. இவ்வாறாக இயற்கையாக அமைந்த நிலம், கிரேட் ஜிம்பாப்வேயின் புனித தளத்தின் ஆன்மீக நுழைவாயிலாக செயல்படுகிறது.

6. இன்றுவரை, நாட்டில் மொத்தம் ஐந்து இடங்கள் உலக பாரம்பரிய பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. Mana Pools (1984), கிரேட் ஜிம்பாப்வே (1986), Khami (1986), விக்டோரியா நீர்வீழ்ச்சி (1989) மற்றும் Matopo (2003). மதிப்புமிக்க உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுவதற்கான காத்திருப்பு பட்டியலில் Ziwa National Monument-ம் உள்ளது.

7. கிரேட் ஜிம்பாப்வே இடத்தில் வாழ்ந்த பழங்குடியினரான சோனா மக்களின் ஒரு பிரிவான கரங்கா மக்களின் கிராமம் அருகில் உள்ளது. கால்நடை வளர்ப்பு அவர்களது பிரதான தொழிலாக அமைந்துள்ளது. கால்நடையை பாலுக்காகவும் உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். விவசாயமும் அவர்களது பிரதான தொழிலாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து உயர்வான இடத்தில் இருப்பதனால் கேரட் மற்றும் முட்டைகோஸ் பயிரிடுகின்றனர். உணவுக்காக நாட்டு கோழியும் பிராய்லர் கோழியும் வளர்க்கப்படுகிறது. சோனா மக்களின் கிராமத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஓரிரு நாட்கள் தங்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆப்பிரிக்காவின் கிராம சூழலை அனுபவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

8. ஆப்பிரிக்காவின் Big Five விலங்குகளான காண்டாமிருகம், சிங்கம், சிறுத்தை, யானை மற்றும் காட்டெருமை ஆகும்.

9. சோனா மக்களின் கிராமத்தில் உள்ள வீடுகள் செம்மண்ணால் கட்டப்பட்டவை மேற்கூரை காய்ந்த புற்களினால் நெய்யப்பட்டவை. கிரேட் ஜிம்பாப்வேயில் வாழ்ந்த பழங்குடியினரான கரங்கா மக்கள் பெரும்பாலும் மஸ்விங்கோ மற்றும் வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

10. பல்வேறு வேலைப்பாடுகள் நிறைந்த கூடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை நெய்வதே கரங்கா மக்களின் முக்கிய விவசாயமாக உள்ளது. பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பானைகளை தான் சமைப்பதற்கு உபயோகப்படுத்துகின்றனர்.

11. சோனா பழங்குடியினரின் ஒவ்வொரு ஆணும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியே வீடு அமைத்துள்ளனர். ஐந்தாவது மனைவியின் வீடு சிறியதாக இருக்கும் மற்றும் அதில் உள்ள பாத்திரங்களும் எண்ணிக்கை அளவில் குறைந்ததாகவே இருந்தாலும் ஐந்தாவது மனைவி தான் அவரது விருப்பமான மனைவி என்ற குறியீடும் அவர்களிடையே இருந்துள்ளது. அதாவது முதல் தார மனைவிக்கு பெரிய அளவிலான வீடும் அதற்கு அடுத்து வரும் மனைவிக்கு அதைவிட சிறிய அளவிலான வீடும் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த மனைவிக்கு வீட்டின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. வீட்டின் அளவும் பாத்திரங்களும் குறைந்தாலும் அண்மையில் திருமணம் செய்த மனைவியைத்தான் அவரது விருப்ப மனைவியாக இருந்துள்ளார்.

12. பண்டைய கால தமிழ் மக்களின் கலாச்சாரமும் சோனா மக்களின் கலாச்சாரமும் பல்வேறு விதங்களில் ஒத்துப் போகிறது. சோனா மக்கள் தனி ஒரு சமூகமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கென பொதுவான ஒரு வங்கிக் கணக்கை தொடங்கி அவர்களது தேவைக்கு அந்த பொதுவான வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

13. Great ஜிம்பாப்வே, ஜிம்பாப்வே நாட்டின் தேசிய சின்னமாக 1937-இல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ல் இதன் பெயரே நாட்டின் பெயராக மாற்றப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய தளமாக 1986இல் ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

.

14. முதிர் கவி எரி (Mutrikwi Lake): 'முதிர்ந்த கவிஞர்' என்ற தமிழ் பெயரே நாளடைவில் முதிர் கவி என்று மருவியுள்ளது என்று நினைக்கிறேன். 1960 இல் ஆங்கிலேயர்கள் தெற்கு ஆப்பிரிக்காவில் ஆட்சி செய்த போது முதிர் கவி ஏரியை ஒட்டிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி என்றாலும் பல்வேறு ஆறுகள் இயற்கையாக இந்த ஏரியில் இணைகிறது உதாரணத்திற்கு முதிர் கவி ஆறு மற்றும் Popoteke ஆறு போன்றவை. ஆங்கிலேயர்கள் விவசாயத்திற்காக இந்த தடுப்பணையை கட்டியுள்ளார்கள். இந்த தடுப்பனையின் பெயர் Kyle அணை. Scotland நாட்டை சேர்ந்தவர் தான் இந்த அணையை கட்டினார். அவருடைய சொந்த ஊரான ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு முக்கிய நகரத்தின் பெயரை இந்த அணையின் பெயராக சூட்டியுள்ளார். மஸ்விங்கோ நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கிரேட் ஜிம்பாப்வே Ruins.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 6

1. ஜிம்பாப்வே மக்களிடையே ஒரு வினோத பழக்கம் உள்ளது, புது நபரை கண்டால் அவரது whatsapp நம்பரை பெற்று அவர்களுக்கு அவ்வப்போது காலை வணக்கம், மாலை வணக்கம் போன்ற வணக்கங்களைத் தெரிவித்து நலம் விசாரிக்கும் பழக்கம் வெகுவாக உள்ளது.

2. ஜிம்பாப்வே மக்கள் தாராளமாக மூன்று நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

3. பொது போக்குவரத்து கிடையாததால் தனியார் வாகனங்களை (Shared Van) கொண்டு மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள்.

4. ஜிம்பாப்வேயில் அரசு நடத்தும் பள்ளிக்கு மூன்று மாத கட்டணமாக 30 முதல் 50 டாலர் வரை கட்டணமாக செலுத்துகின்றனர். கட்டட பராமரிப்பு செலவுக்காகவும் பொது சுகாதாரத்திற்காகவும் அரசு அப்பணத்தை உபயோகப்படுத்துகிறது.

5. பெரும்பாலானோர் 100 முதல் 150 டாலர்கள் வரை சம்பாதிக்கிறார்கள். அச்சிறு தொகையைக் கொண்டு அவர்களது வாழ்க்கை மிகவும் கடினமாகத்தான் செல்கிறது. ஏனெனில் பொதுப் போக்குவரத்தில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமே ஒரு டாலர் செலவாகிறது.

6. சோனா மக்கள் ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கிரேட் ஜிம்பாப்வே பகுதியில் வசிக்கிறார்கள். பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை Great Zimbabwe சாம்ராஜ்யம் நடைபெற்றது. அந்த காலத்தில் பெரு வணிக வணிகர்கள் இந்திய நாட்டில் இருந்தும் அரேபியா நாட்டில் இருந்தும் ஜிம்பாப்வே சோனா மக்களிடம் வணிகம் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. தங்கச் சுரங்கங்கள் அதிகமாக இருந்ததனால் இந்தப் பகுதி செல்வ செழிப்பாக அந்த காலத்தில் இருந்துள்ளது.

7. கிரேட் Zimbabwe Ruins மூன்று விதமாக பிரிக்கலாம் ஒன்று Hill Complex உயரமான மலைகளில் உள்ள கட்டிடங்கள். இரண்டாவது, கிரேட் Enclosure தரைமட்டத்திலேயே ஒரு வட்ட வடிவிலான கட்டிடங்களைக் கொண்டது. மூன்றாவதாக Valley காம்ப்ளக்ஸ் நிலத்தடியில் இருந்து கொஞ்சம் தாழ்வான பகுதியில் உள்ள கட்டிடங்கள் என்று நம்பப்படுகிறது.

8. Hill Complex தான் முதன் முதலில் கட்டப்பட்ட கட்டிடம் என்று நம்பப்படுகிறது. 1890 இல் ஜிம்பாப்வேயை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகிறார்கள். கைப்பற்றிய அந்த காலத்தில் பல தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது. அப்போதுதான் கிரேட் Zimbabwe Ruins-ஐ கண்டுபிடிக்கிறார்கள். அதாவது 13 இல் இருந்து 15 நூற்றாண்டு வரை வாழ்ந்த மக்களின் கலாச்சாரம், நாகரீகம், கட்டிடக்கலை போன்றவற்றை அறிகிறார்கள்.

9. ஜிம்பாப்வே என்றால் கற்களால் ஆன வீடு என்று பொருள்படும். அதாவது House of stones. சிதலமாடைந்த கிரேட் ஜிம்பாப்வே இடத்திலுள்ள உள்ள கற்கள் எல்லாம் கிரானைட் கற்கள்.

10. அகழ்வாராய்ச்சியின் முடிவில் Rhodesia என்ற பெயரை ஜிம்பாப்வே என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

11. பொதுவாக ஜிம்பாப்வேவிற்கு சுற்றுலாப் பயணிகள் அவ்வளவாக வருவதில்லை. அண்டை நாடான தென்னாப்பிரிக்காவிற்கும் சாம்பியாவிற்கும் வரும் சுற்றுலாப் பயணிகளை விட மிகக் குறைவான பயணிகளே ஜிம்பாப்வேவிற்கு வருகை தருகின்றனர்.

12. ஆங்கிலேயர்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் முடிவை மறைப்பதற்காக அதாவது சோனா மக்கள் தான் இந்த இடத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை மறைக்க முற்பட்டனர். இதை அறிந்த ஜிம்பாப்வேயின் பூர்வக்குடி மக்களான சோனா மக்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்திற்கு பிறகு தங்கள் நாட்டின் பெயரை Rhodesia என்று இருந்ததை ஜிம்பாப்வே (House of Stones) என்று தங்களது தாய் மொழியில் பொருத்தமான பெயரை சூட்டிக் கொண்டனர்.

13. கிரேட் Zimbabwe Ruins பகுதிக்கு அருகாமையில் ஒரு பெரிய ஏரி உள்ளது அதன் பெயர் முதிர்க்வி எரி. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி. தெற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய ஏரி இதுதான். நிறைய ஆறுகள் இந்த ஏரியில் இணைகிறது. பொப்பிடிக் ஆறும் இந்த ஏரியில் தான் கலக்கிறது. அருகில் ஒரு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் விவசாயத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர் காலத்தில் Lake Kyle என்று இருந்த பெயர் ஜிம்பாப்வேயின் சுதந்திரத்திற்கு பிறகு Lake Mutirikwi முதிர்க்வி என்று மாற்றியுள்ளனர். ஏரிக்கு அருகில் பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கியுள்ளனர். அருகில் உள்ள காடுகளில் இருந்து விலங்குகள் ஏரிக்கு வந்து தண்ணீருக்காக வருகை தருகின்றது. சிறுத்தை, ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரை, மான்கள் போன்ற விலங்குகள் அருகில் இருக்கும் காடுகளில் வாழ்கின்றன.

14. ஜிம்பாப்வே நாட்டின் கொடியிலேயே ஆப்பிரிக்கப் பருந்தை (Great Zimbabwe Bird) சின்னமாக வைத்திருப்பார்கள். தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த பருந்தை Soapstone என்ற கல்லில் சிற்பமாக வடித்துள்ளனர். அதை அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் (Museum) காணலாம். பழங்கால சோனா மக்கள் பருந்தை கடவுளாக வணங்கியுள்ளனர்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 5

1. ஜூலை 2024 நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலர் 7.62 ஜிம்பாப்வே கோல்டுக்கு (ZiG) சமம்.

2. A4 என்பது ஜிம்பாப்வேயில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை, இது R1 நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது, இது Beitbridge மற்றும் Harare இடையே செல்கிறது. பீட்பிரிட்ஜில் இருந்து ஹராரேவை அடையும் முன் Rutenga, Ngundu, Masvingo, Mvuma, Chivhu வழியாக செல்கிறது. Beitbridge என்பது ஜிம்பாப்வேயின் தென்கோடியில் உள்ள நகரம், தென்னாப்பிரிக்காவின் எல்லையில் உள்ளது.

3. மாஸ்விங்கோ என்பது ஜிம்பாப்வே பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டு இருந்த காலனித்துவ காலத்தில் விக்டோரியா கோட்டை என்று அழைக்கப்பட்டது. இது தென்கிழக்கு ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு நகரம் மற்றும் மாஸ்விங்கோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் கிரேட் ஜிம்பாப்வேக்கு அருகாமையில் அமைந்துள்ளது. கிரேட் ஜிம்பாப்வே என்னும் தேசிய சின்னத்தினால் நாடு அதன் பெயரைப் பெற்றுள்ளது. மற்றும் Mutirikwi முதிரிக்வி ஏரி, அதன் பொழுதுபோக்கு பூங்கா, Kyle கைல் அணை மற்றும் Kyle தேசிய ரிசர்வ் ஆகியவற்றிற்கு அருகில் கிரேட் ஜிம்பாப்வே உள்ளது. ஜிம்பாப்வேயில் உள்ள பல்வேறு Shona பழங்குடியினரின் சந்ததியினரான Karanga மக்கள் பெரும்பான்மையினராக கிரேட் ஜிம்பாப்வேயில் வசிக்கிறார்கள்.

4. Popoteke ஆறு மற்றும் பள்ளத்தாக்கு ஜிம்பாப்வேயின் மாஸ்விங்கோ நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது. Popoteke Gorge (பள்ளத்தாக்கு) Mutirikwi (பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் Kyle என்று அழைக்கப்பட்டது) ஏரியின் வடக்கே அமைந்துள்ளது மற்றும் ஏரியின் வடக்குப் பகுதியில் உள்ள Beza மலைத்தொடரின் பிளவுகளுக்கு இடையே நதி ஓடுகிறது. Popoteke ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள Mutirikwi ஏரியில் இணைகிறது.

5. மாஸ்விங்கோ, கடல் மட்டத்திலிருந்து 1087.71 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. ஹராரே, கடல் மட்டத்திலிருந்து 1,483 மீட்டர் (4,865 அடி) உயரத்தில் ஒரு பீடபூமியில் அமர்ந்திருக்கிறது. ஹராரேவை Highlands என்றும் Masvingoவை Midlands என்றும் அழைக்கிறார்கள்.

6. Masvingo என்பது வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம். பொதுவாக ஜிம்பாப்வேயில் சோளம், கோதுமை, புகையிலை பயிரிடுகிறார்கள். Masvingo சுற்றிலும் கனிம சுரங்கங்கள் பல உள்ளன. முக்கியமாக லித்தியம் சுரங்கம் உள்ளது. சிறிய அளவில் தங்கச் சுரங்கமும் உண்டு. குளிர்காலத்தில் கரும்பு பயிரிடுகிறார்கள். ஜிம்பாப்வேயின் முக்கிய உணவான சோளம் மற்றும் நிலக்கடலை மழைக்காலத்தில் பயிரிடுகிறார்கள்.

7. Mozambique மொசாம்பிக் 2024 இல் தனிநபர் அல்லது ஒரு குடும்பம் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் ஆப்பிரிக்க நாடாக முன்னிலை வகிக்கிறது. அதிக பணவீக்கம், பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. இந்த காரணிகள் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

8. 2024 இல் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட 10 ஆப்பிரிக்க நாடுகள் முறையே Mozambique, Senegal, Ivory Coast, Ethiopia, Mauritius, Zambia, Cameroon, Zimbabwe, South Africa, Uganda.

9. 2024 இல் குறைந்த வாழ்க்கைச் செலவைக் கொண்ட 10 ஆப்பிரிக்க நாடுகள் முறையே நைஜீரியா, லிபியா, கென்யா, மடகாஸ்கர், ருவாண்டா, தான்சானியா, கானா, எகிப்து, சோமாலியா, துனிசியா

10. Matka Canyon, North Macedonia: Matka மட்கா என்பது ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவின் மத்திய ஸ்கோப்ஜேவிற்கு (Central Skopje) மேற்கே அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். ஏறக்குறைய 5,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட மட்கா, வடக்கு மாசிடோனியாவில் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும், மேலும் இது பல இடைக்கால மடாலயங்களின் தாயகமாகவும் விளங்குகிறது. மட்கா பள்ளத்தாக்கில் உள்ள மட்கா ஏரி மாசிடோனியாலேயே பழமையான செயற்கை ஏரியாகும்.

11. Yumuri பள்ளத்தாக்கு (Canyon), கியூபாவின் பராக்கோவாவிலிருந்து (Baracoa) கிழக்கே 30 கி.மீ தூரத்தில் பயணித்தால், நாட்டின் பலரால் அறியப்படாத இயற்கை அதிசயங்களில் ஒன்றை நீங்கள் காணலாம்: யுமுரி Canyon.

12. Yumuri River Canyon தீவு பல்லுயிர் வாழும் பள்ளத்தாக்கு ஆகும். 220 மீட்டர் ஆழம், சுமார் 200 மீட்டர் உயரமுள்ள சுவர்களால் சூழப்பட்டு மற்றும் உள்நாட்டு நிலப்பரப்பில் சுமார் 4 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது. பசுமையான இடத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் அழகு பார்வையாளர்களையும் உள்ளூர் மக்களையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது, 8.7 சதுர கிலோமீட்டர் காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள பராகோவா மற்றும் மைசி (Maisi) நகராட்சிகளுக்கு இடையிலான எல்லைகளைக் குறிக்கிறது, பல பறவைகள் மற்றும் நிலநீர்வாழ் உயிரினங்கள் (Amphibians) வாழ்கின்றன.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

"Goat"

தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் அமைத்தால் வியாபார ரீதியாக உதவும் என்ற நோக்கில் அமைத்துள்ளார்கள். இதன் மூலம் நாயகனின் தமிழ் சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் மொழிப் பற்றும் நன்றாக விளங்குகிறது.

கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர்களை போற்றும் விதமாக இந்த Goat என்ற அடைமொழி உலகப் பிரபலமானது. கால்பந்தாட்டத்தை விளையாடினால் ஏழு சதவிகிதம் நம் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் டென்னிஸ் விளையாட்டை தீவிரமாக விளையாடினால் பத்து சதவிகிதம் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். இம்மாதிரியான விளையாட்டுகளை விளையாடுபவர்கள் யாவரும் கடும் உடல் உழைப்பை முன்னிறுத்தி பல திறமையாளர்களின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிய பின்னரே இவ்வாறான கௌரவ பட்டம் வழங்கப்படுகிறது.

நீலச்சட்டை மாறன் கூறியது போல தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுத்ததைப் போல முன்னொரு காலத்தில் தமிழ் திரை உலகில் ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை தூசு தட்டி உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி நடிக்க வைத்திருப்பது Oldest of All Time என்ற பெயரே படத்திற்கு நெருக்கமான பெயராக இருக்கும்.

இயக்குனராக வெங்கட பிரபு வழக்கம் போல ஜெயித்திருக்கிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய கம்பீரத்தை விட்டுக் கொடுக்காது ஆங்காங்கே ஜொலிக்கிறார். இதுவே நாயகனின் கடைசி படம் என்று வருத்தப்படுபவோருக்கு இனி வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் அவரது நடிப்புப்பயணம் தொடரும் என்ற பேருவகையை அளித்திருப்பது நடிகர் விஜய்யின் வெற்றி அமைகிறது.

அந்த காலத்தில் பெரிய கமல் பிடிக்குமா குட்டி கமல் பிடிக்குமா என்று அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்த பிறகு கேட்கப்பட்ட கேள்விக்கு குட்டி கமல் என்று பதிலளித்த எனக்கு இப்படத்தைப் பார்த்த பிறகு பெரும் வியப்பு காத்திருந்தது. அதே கேள்வியை என் மகனிடம் கேட்ட பொழுது வந்த பதில் இது தான். "எனக்கு சஞ்சய் தான் பிடித்திருந்தது. அப்பா எல்லாம் ஓல்ட், சஞ்சய் தான் சூப்பர்".

வரலாறு தொடர்கிறது.

நன்றி வணக்கம்.

#பார்த்த_திரைப்படத்தில்_உணர்ந்தவை

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 4

1. ஜிம்பாப்வே பத்து நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: புலவாயோ, ஹராரே, மணிக்கலாண்ட், மஷோனாலண்ட் சென்ட்ரல், மஷோனாலாந்து கிழக்கு, மஷோனாலண்ட் மேற்கு, மாஸ்விங்கோ, மாடபெலேலேண்ட் வடக்கு, மாடபெலேலேண்ட் தெற்கு மற்றும் மிட்லாண்ட்ஸ்.

2. ஜிம்பாவேயின் முக்கிய நகரங்கள் Harare மற்றும் புலவாயோ. புலவாயோவில் Ndbele இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். ஹராரேவில் சோனா இன மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

3. ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள எந்தவொரு பயணியும், கற்சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், Balancing Rocks ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பார்க்காமல் திரும்புவது உண்மையான ஜிம்பாப்வே அனுபவமாக கருத முடியாது. ஹராரேயில் இருந்து தென்கிழக்கே 13 கிமீ தொலைவில், Chiremba சாலையில் Chiremba Balancing Rocks அமைந்துள்ளது. Balancing Rocks பார்ப்பதற்கு மிகவும் பிரமிக்க வைக்கின்றன. ராட்சத பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அவை அழகான இயற்கை கலைப் படைப்புகளாக விளங்குகின்றன.

4. Chiremba பகுதியில் உள்ள Money Rock என்றழைக்கப்படும் Balancing Rock ஜிம்பாப்வே நாட்டின் நூறு டிரில்லியன் பணத்தாளின் படமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் நூறு ட்ரில்லியன் பணத்தாள் தான் உலகிலேயே அதிக மதிப்பிலான பணத்தாள் என்ற பெருமை பெறுகிறது. Balancing Rock என்பது அமைதியையும் பொறுமையையும் நிலைத்தன்மையையும் வலியுறுத்தும் சின்னமாக விளங்குகிறது.

5. பூமிக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து அதனால் உருவான பாறை குழம்புகள் நாளடைவில் அதாவது மில்லியன் வருடக் கணக்கான கால இடைவெளியில் பாறைகளாக உருமாறி உள்ளன. காலப்போக்கில் பாறை அரிப்பு காரணமாக ஒன்றன் மீது ஒன்றாக வைத்தது போல் காட்சி அளிக்கும் படி இயற்கையாகவே அமைந்துள்ளது.

6. San பழங்குடியினர் தென்னாப்பிரிக்காவின் பழமையான குடிமக்களின் வழித்தோன்றல்கள், பூமியில் உள்ள பழமையான கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள். San என்ற சொல் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல பழங்குடி இனக்குழுக்களுக்கான கூட்டுச் சொல்லாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த குழுக்களில், எடுத்துக்காட்டாக, ǃKung, |Gui, Ju/'hoasi அல்லது Naro Tribe ஆகியவை அடங்கும். டிஎன்ஏ சோதனை மூலமாக சான் மக்கள் தான் முதல் ஹோமோ சேபியன்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்கிறது.

7. Rock Art, சான் மக்களின் வரலாற்றையும், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் விதமாக உள்ளது. சான் மக்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்ய பாறை ஓவியக் கலையைப் பயன்படுத்தினர்.

8. 2008இல் ஜிம்பாப்வேயின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஒரு டிரில்லியன் முதல் 100 ட்ரில்லியன் வரை பணத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன. தினந்தோறும் பொருட்களின் விலை மாறிக்கொண்டே இருந்தது.

9. லான்காஸ்டர் ஹவுஸ் ஒப்பந்தம் என்பது 21 டிசம்பர் 1979 அன்று லான்காஸ்டர் ஹவுஸில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைக் குறிக்கிறது, ஒரு அரசியலமைப்பு மாநாட்டின் முடிவில் பல்வேறு கட்சிகள் ரோடீசியாவின் எதிர்காலம் பற்றி விவாதித்ததைத் தொடர்ந்து (ஜிம்பாப்வே முன்பு ரோடீசியா என்று அழைக்கப்பட்டது) இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் விளைவாக ரோடீசியன் புஷ் போரை திறம்பட முடித்து வைக்கப்பட்டது. இது 1964 இல் அடைந்த ரோடீசியாவின் ஒருதலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை ரத்து செய்ததைக் குறித்தது மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரம் ஒரு இடைக்கால காலத்திற்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்ததன் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான தேர்தல்கள் நடைபெற்றது.

10. 1980களில் ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பிறகு Lancaster ஒப்பந்தத்தின் படி வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்கள் நிலத்தை வாங்க உரிமை இருந்தாலும் வெள்ளையர்கள் அவர்களுக்கு நிலத்தை விற்க விரும்பவில்லை. 2000தில் Mugabe அரசு வெள்ளையர்களிடம் இருந்து நிலத்தை அடாவடியாக பிடுங்கி கருப்பர்களுக்கு கொடுத்ததன் விளைவாக இப்போது ஜிம்பாவேயில் உள்ள கருப்பர்கள் பயனடைய தொடங்கி இருக்கிறார்கள். அந்தத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் அதில் பெரும் ஊழல் நடந்திருந்தாலும் அதனுடைய தாக்கம் நீண்டகால அடிப்படையில் கருப்பர்களுக்கு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

11. 2000-இல் மூகாம்பே அரசின் நில சீர்திருத்தத் திட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணம் நிலத்தை பராமரிக்க போதுமான அறிவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாமானியர்களான கருப்பர்களுக்கு இல்லாத காரணத்தால் விவசாயம் பெருமளவு வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது. நிலத்தை வன்முறையின் மூலம் வெள்ளையர்களிடமிருந்து பிடுங்கி கருப்பினத்தவர்களுக்கு வழங்கியதை எதிர்த்து அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஜிம்பாப்வே அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததும் அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாய் அமைந்தது.

12. ஜிம்பாப்வேயில் பணப்பரிமாற்றத்திற்காக உலகில் உள்ள முக்கிய பணத்தாள்களான டாலர், யூரோ, தென் ஆப்பிரிக்கா கரன்சியான Rands போன்றவை உபயோகப்படுத்தலாம். மக்கள் பெரும்பாலும் அமெரிக்கா டாலர்களையே பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

13. ஜிம்பாப்வேயின் இரண்டாவது பெரிய நகரமான புலவாயோவில் சவுத் ஆப்பிரிக்காவின் பணமான (Rands) ராண்ட்சை அதிக அளவில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஹராரேவில் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துகின்றனர். புலவாயோவில் சில்லறை காசுகளும் பயன்பாட்டில் உள்ளது.

14. 1,200 மீ உயரமுள்ள உள்நாட்டு பீடபூமி நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

15. Mukuvisi Woodlands ஜிம்பாப்வேயின் தேசிய பொக்கிஷங்களில் ஒன்றாகும். ஹராரேயில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் சில பெரிய பசுமையான இடங்களுள் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் 18,000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வருகை தருகின்றனர். சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை போன்று உள்ளது.

16. பிப்ரவரி 2023 இல் நடைபெற்ற ஜிம்பாப்வே சுற்றுலா ஆணையத்தின் துவலம்பா தேசிய சுற்றுலா மற்றும் சுற்றுலா விருதுகள் 2022 இல், அந்த ஆண்டின் சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிக்கான விருதை வென்றதில் Mukuvisi Woodlands பெருமிதம் கொள்கிறது.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 3

1. ஜிம்பாப்வே தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதற்கான காரணங்கள். ராபர்ட் முகாம்பின் ஆட்சி காலத்தில் 2000 இல் நாட்டில் சிறுபான்மையினராக வாழும் வெள்ளையர்களிடம் இருந்த நிலங்களை கறுப்பின மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. முகாம்பின் கட்சியினரே தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பொது மக்களுக்கு சரியான முறையில் பகிர்ந்து அளிக்காததாலும் வெள்ளையர்களிடமிருந்து அடாவடியாக நிலத்தை பிடுங்கிய காரணத்தினால் வெகுண்டெழுந்த மேற்குலகத்தினரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததாலும் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 1990களில் உச்சமாக இருந்த எய்ட்ஸ் தெற்கு ஆப்பிரிக்கா பகுதியில் இருந்துதான் உருவானது. மேலும் இரண்டாயிரத்தில் காலரா என்னும் நோயும் இங்கு பரவலாக மக்களை கொன்று குவித்தது. அரசின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையினால் மக்களிடையே அதிக அளவில் உயிரைக் கொல்லும் நோய் பரவியதாலும் பொருளாதாரம் 2008இல் அதல பாதாளத்திற்கு சென்றது. அதன் பிறகே வேறு வழியின்றி அமெரிக்க டாலரை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2. தற்போது வெள்ளை இன மக்கள் சிறுபான்மையினராகத்தான் நாட்டில் இருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான வெள்ள இன மக்கள் இங்கிலாந்து நாட்டிற்கே சென்று விட்டார்கள். மேலும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் குடி பெயர்ந்து விட்டனர்.

3. ஜிம்பாப்வேயின் பருவ காலங்கள்: மழைக்காலம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இருக்கும். அந்த காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஜூன் முதல் அக்டோபர் வரை குளிர்காலமாக இருக்கிறது. மழை அறவே பெய்யாது. பகலில் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது, இரவில் ஐந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. இந்த காலத்தில் தான் தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை அதிக அளவில் பார்க்க முடியும். ஏனெனில் மழை பொழியாத காரணத்தினால் தண்ணீரைத் தேடி விலங்குகள் அலைவதால் அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிவதாக கருதுகிறார்கள்.

4. Mopane woods என்பது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் கவனிக்கப்படாத ஆப்பிரிக்காவின் வன்மையான மரமாகும் (Hardwood), அதன் அடர்த்தி மற்றும் ஆயுள் மற்ற மரங்களை காட்டிலும் சிறப்பானது. Mopane மரங்கள் சிறந்த ஒலியியல் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இது ஆப்பிரிக்க பிளாக்வுட்டுடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.

5. Hwange ஹ்வாங்கே தேசிய பூங்கா மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ளது. அதன் புல்வெளிகள் மற்றும் மொப்பேன் காடுகளில் பெரிய யானைக் கூட்டங்கள், சிங்கங்கள் மற்றும் ஆப்பிரிக்க காட்டு நாய்கள் உள்ளன. தெற்கு லுவாங்வா (South Luangwa) தேசிய பூங்கா கிழக்கு ஜாம்பியாவின் லுவாங்வா (Luangwa) நதி பள்ளத்தாக்கில் உள்ளது. இது ஏராளமான வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றது.

6. ஜிம்பாப்வேயின் பாரம்பரிய உணவான Sadza என்பது முக்கிய விவசாயப் பயிரான வெள்ளை சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு முக்கிய உணவாகும். சோள மாவை தண்ணீருடன் கலந்து, கெட்டியான, மென்மையான நிலைத்தன்மையை அடையும் வரை சமைக்கிறார்கள். சோளத்தால் செய்யப்பட்ட உப்புமா என்று நாம் அழைக்கலாம்.

7. Kopje கோப்ஜே மலை - ஹராரேவில் உள்ள 300 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட வட்ட வடிவிலான மலையாகும். ஹராரே நகரத்தை கழுகு பார்வை பார்க்க உகந்த இடமாகும்.

8. Nehanda Nyakasikana நேஹந்தா நயகாசிகானா என்ற பெண் சோனா இனத்தை சார்ந்த ஆவி ஊடகம் (spirit medium) ஆவார். ஆவி ஊடகம் என்றால் தம் மீது இன்னொருவரின் ஆவி இருப்பதாக கருதப்படுவது. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை வழி நடத்தினார். அவரை ஆட்கொண்டிருந்த ஆவியிலிருந்து பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது, அது மக்களிடையே பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது. ஷோனா மக்களின் ஆன்மீக, அரசியல் மற்றும் இராணுவத் தலைவராக இருந்தார். ஆங்கிலேயர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்துவிட்டார், இறந்தபின் அவருடைய எலும்புகளும் எழுந்து சண்டையைத் தொடரும் என்று உறுதியளித்தார்.

9. ராபர்ட் முகாபேவுக்கு எதிராக குரல் கொடுத்தத்தினால் தான் ஹென்ரி ஓலாங்கா கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பிரிட்டன் தப்பி ஓடினார் என்ற செய்தியும் இருக்கிறது.

10. ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம் (ZAPU) ஒரு ஜிம்பாப்வே அரசியல் கட்சி. இது ஒரு போர்க்குணமிக்க கம்யூனிஸ்ட் அமைப்பு மற்றும் அரசியல் கட்சி, 1961 இல் நிறுவப்பட்டது முதல் 1980 வரை ரோடீசியாவில் பெரும்பான்மை ஆட்சிக்காக பிரச்சாரம் செய்தது. 1987 இல், அது ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய யூனியன்-தேசபக்தி முன்னணியுடன் (ZANU - PF) இணைந்தது. தற்போதைய அதிபரான எமர்சன் மனாங்குவா மற்றும் முன்னாள் அதிபரான ராபர்ட் முகாம்பே ZAPU கட்சியினை சேர்ந்தவர்கள் தான்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 2

1. Kombi என்பது ஜிம்பாப்வேயில் மினிபஸ்களின் முறைசாரா பெயர். இது பொதுவாக தனியாருக்குச் சொந்தமான ஆனால் நாட்டில் பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் 18 இருக்கைகளைக் கொண்ட வாகனம் ஆகும். கோவிட் லாக்டவுன் காலத்தில் தடை செய்யப்பட்ட இந்த Kombi போக்குவரத்து தற்போது 2022 இல் இருந்து மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நகரத்திற்குள் எந்த ஒரு இடத்திற்கும் ஒருமுறை பயணம் செய்ய ஒரு டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும். வாகனம் போகும் வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். மற்ற நாடுகளைப் போல இணையம் வழியாக பொது போக்குவரத்து இயங்கும் நேரத்தை ஜிம்பாப்வேயில் கண்காணிக்க முடியாது.

2. ஜிம்பாப்வே House, ஹராரேயில் உள்ள ஜிம்பாப்வே ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். Emmerson Mnangagwa, 24 நவம்பர் 2017 முதல் ஜிம்பாப்வேயின் ஜனாதிபதியாக பணியாற்றுகிறார். Robert Mugabe ஒரு ஜிம்பாப்வே புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் 1980 முதல் 1987 வரை ஜிம்பாப்வேயின் பிரதமராகவும் பின்னர் 1987 முதல் 2017 வரை ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். நாட்டிற்கு சுதந்திரம் ஆங்கிலேயர்களிடம் இருந்து 1980 ஆம் வருடம் கிடைக்கிறது.

3. ஜிம்பாப்வேயில் சில்லறை தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் டாலரை அதிகமான அளவில் உபயோகப்படுத்துகிறார்கள். மளிகை கடைகளில் டெபிட் கிரெடிட் கார்டுகளில் பணத்தை செலுத்தும் போது சில்லறை தொகையை சரியாக செலுத்த முடியும் மற்ற இடங்களில் பணத்தை செலுத்தும் போது முழு டாலராகத்தான் செலவழிக்க இயலும்.

4. ஜிம்பாப்வே போல பல நாடுகளில் இன்றும் அமெரிக்கா டாலரை பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பால்கன் நாடுகளில் ஒன்றான மெசிடோனியா நாட்டில் அமெரிக்க டாலரை தான் பயன்படுத்துகிறார்கள் இருந்தாலும் அங்கே சில்லறைக்காக சென்ட் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளது.

5. மக்கள் மூன்று விதமான மொழிகளை பேசுகிறார்கள். முதலாவதாக ஆங்கிலம். ஆங்கிலேயர்கள் 1890 இல் இருந்து 1980 வரை ஆட்சி புரிந்ததனால் மக்கள் எளிதில் ஆங்கிலம் பேசுவதற்கு காரணமாக உள்ளது. இரண்டாவதாக சோனா (Shona) . மூன்றாவதாக டெபிலி (Ndebele).

6. ஜிம்பாப்வேயில் பூர்வக்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்ட இனமான Shona இன மக்கள் 80 சதவிகிதம் வசிக்கிறார்கள். Ndebele எனும் பூர்வக்குடி மக்கள் 15 சதவிகிதம் இருக்கிறார்கள். மிச்சமுள்ள ஐந்து சதவிகிதம் சிறு சிறு எண்ணிக்கையில் வெவ்வேறு பூர்வக்குடி இன மக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கிறித்துவ மதத்தை பின்பற்றுகிறார்கள். Shona மற்றும் Ndebele இன மக்கள் பேசும் மொழியினை Shona மற்றும் Ndebele என்றே அழைக்கிறார்கள்.

7. மத்திய ஜிம்பாப்வே பீடபூமி, கடல் மட்டத்திலிருந்து 800 முதல் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஜிம்பாப்வேயின் விவசாயம் மற்றும் நாட்டின் அதிக உற்பத்தி செய்யும் வணிகப் பண்ணைகளை உள்ளடக்கியது. நிலத்தால் மட்டுமே சூழப்பட்ட நாடு. கடலே கிடையாது.

8. பெரும்பாலும் தெற்கு ஆப்பிரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜிம்பாப்வே மற்றும் மொஸாம்பிக் போன்ற நாடுகளுக்கு குறைவான எண்ணிக்கையில் தான் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜாம்பியா, நமீபியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள்.

9. ஜிம்பாப்வேக்கு இன்னொரு பெயர் உள்ளது அதுதான் Rhodesia. சோனா மக்களின் மொழியில் ஜிம்பாப்வே என்றால் கற்களால் ஆன வீடு (House of Stones) என்று பொருள்படும். ஜிம்பாப்வே தெற்கு பகுதியில் இருப்பதனால் Southern Rhodesia என்றும் Zambia வடக்கு பகுதியில் இருப்பதனால் Northern Rhodesia என்றும் அழைக்கிறார்கள்.

10. பிரிட்டிஷ் சவுத் ஆப்பிரிக்கன் கம்பெனி 1890 இல் ஜிம்பாவேக்குள் வருகிறார்கள். அவர்கள் வருவதற்கான காரணம் அதிக அளவிலான பிளாட்டினம், தங்கம் மற்றும் உலகிலேயே முக்கியமான வைரசுரங்கமும் இருந்ததனால்.

11. 1965இல் வடக்கு ரோடீசியா (தற்போது சாம்பியா) மற்றும் ஞாயசாலாந்து (தற்போது மாளாவி என்று அழைக்கப்படுகிறது) போன்ற அண்டை நாடுகள் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த உற்சாகத்தை கொண்டு சிறுபான்மையினரான வெள்ளை இனத்தவரின் கூட்டணியில் இயான்ஸ்மித் என்பவரின் தலைமையில் தெற்கு ரோடீசியா விடுதலை பெற்றதாக தாங்களாகவே அறிவித்துக் கொண்டு ஆட்சி அமைக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் இதை அங்கீகரிக்கவில்லை என்றாலும் எதிர்க்கவும் இல்லை. இது பூர்வ குடி மக்களான சோனா மற்றும் Ndbele இன மக்களுக்கு பிடிக்காத காரணத்தால் புரட்சி வெடிக்கிறது. அந்த புரட்சிக்கு சோவியத் யூனியன் மற்றும் கியூபா தங்கள் தரப்பு ஆதரவை வழங்குகிறார்கள். அவர்களின் துணைக் கொண்டு ஏப்ரல் 18 1980ல் மீண்டும் ஒரு சுதந்திரம் அடைகிறார்கள். ஜிம்பாப்வேயின் அதிகாரப்பூர்வ சுதந்திர தினமாக இன்று வரை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 1

1. இந்தியர்களுக்கு ஒரு முறை மற்றும் இரு முறை நுழைவு On Arrival விசா 45 இல் இருந்து 50 டாலர்கள் கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. ஜிம்பாப்வே சென்ற பின்பு விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அதிகாரியிடம் செலுத்த வேண்டும்.

2. ஆப்பிரிக்காவில் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் தான் முக்கியமானது. ஒன்று எத்தியோப்பியா மற்றும் கென்யா. எத்தியோப்பியா தலைநகரம் அடிஸ் அபாபாவிலிருந்தும் கென்யாவின் தலைநகரம் நைரோபியிலிருந்தும் உலகம் முழுவதற்கும் விமான சேவை உள்ளது. இந்த இரு விமான சேவை நிறுவனங்களை தவிர சிறுசிறு நிறுவனங்களான எகிப்து ஏர்வேஸ், ரூவாண்டா ஏர்வேஸ், Air Mauritius, ஏர் Tanzaania உள்ளன. தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை தற்போது கிடையாது.

3. 54 நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா கண்டம்.

4. இந்தியாவின் தாயகமான ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து பிரிந்துவந்து ஆசியா கண்டத்துடன் மோதியதால் உருவானது இமயமலை.

5. இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து தான் கென்யாவிற்கு நேரடி விமான சேவை உள்ளது. வேறு எந்த நகரத்திலிருந்தும் கிடையாது. ஆப்பிரிக்காவில் கென்யா விமான சேவை என்பது இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமாகும். முதலாவது எத்தியோப்பியா தலைநகரம் அடிஸ் அபாபா விமான சேவையே முதன்மையான மிகப்பெரிய விமான சேவை நிறுவனம். மூன்றாவது பெரிய விமான சேவையாக எகிப்து தலைநகரம் கைரோ வரும்.

6. தென்னாப்பிரிக்கா விமான சேவை இந்தியாவிற்கு முன்னொரு காலத்தில் சென்னை மற்றும் மும்பைக்கு நேரடி விமான சேவை நடைபெற்றது. தற்போது தென் ஆப்பிரிக்காவின் நிதிநிலைமை மோசமாக இருப்பதனால் ஆப்பிரிக்காவிற்குள்ளே மட்டும்தான் விமான சேவை நடைபெறுகிறது. இந்தியாவிற்கு நேரடி விமான சேவை தென்னாப்பிரிக்காவில் இருந்து தற்போது கிடையாது.

7. ஜிம்பாப்வே நாட்டிற்கென எந்த ஒரு சொந்தமான விமான நிறுவனமும் கிடையாது. நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருப்பதனால் அதற்கு காரணமாக இருக்கலாம்.

8. கென்யா ஒரு பன்மொழி நாடு. கென்யாவின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளான ஸ்வாஹிலி மற்றும் ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுகின்றன; இருப்பினும், சுவாஹிலி ஆங்கிலத்தை விட பரவலாக பேசப்படுகிறது. சுவாஹிலி என்பது கிழக்கு ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் தாய் மொழியாகும். ஆங்கிலம் என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து பெறப்பட்டது.

9. கென்யாவும் ஈரானும் நடப்பாண்டில் (2024) இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அறிவித்துள்ளன.

10. கென்யா செல்வதற்கான விண்ணப்பங்களை பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன்பு சமர்ப்பிக்கலாம் மற்றும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். eTA USD 32.50 கட்டணமும், தங்கத் திட்டமிடும் விடுதியினை முன்பதிவு செய்ததற்கான சான்றும் தேவை.(கென்யாவில் உள்ள ஏதேனும் நண்பர்களுடன் தங்கினால், அவர்களது அழைப்புக் கடிதமும் தேவைப்படும்).

11. Embraer S.A. எம்ப்ரேயர் எஸ்.ஏ. என்பது பிரேசிலிய பன்னாட்டு விண்வெளி நிறுவனமாகும். இது விமானம் மற்றும் விமான பாகங்களை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேவைகளையும் வழங்குகிறது. உலகளவில் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக எம்ப்ரேயர் சிவில் விமானங்களை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நிறுவனமாகும்

12. இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா எல்லைக்கு அருகில் பல தீவுகள் உள்ளன. அவற்றுள் Madagascar, Mauritius, Comoros, French Reunion, Seychelles, Zanzibar போன்றவை அடங்கும்.

13. ஏப்ரல் 8 2024 அன்று ஜிம்பாப்வேயில் பல தசாப்தங்களாக நாட்டைப் பாதித்திருக்கும் நாணய உறுதியற்ற தன்மை மற்றும் பணவீக்கத்தைத் தணிக்கும் முயற்சியாக ZiG அல்லது Zimbabwe Gold என்ற புதிய தங்க ஆதரவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. ஒரு ரூபாய் என்பது 4.33 Zimbabwe Gold-க்கு சமம். பொதுவாக பணப்பரிமாற்றத்திற்கு அமெரிக்கன் டாலரை மக்கள் வெகுவாக பயன்படுத்துகிறார்கள்.

14. ஜிம்பாப்வே தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நிலத்தால் மட்டுமே சூழப்பட்ட நாடு, இது மகர மண்டலத்தின் (Tropic of Capricorn) வடக்கே அமைந்துள்ளது.

15. ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவுக்கு ஈடாக பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் (Southern Hemisphere) அமைந்துள்ளதால், ஜூன் முதல் நவம்பர் வரை வானிலை பொதுவாக குளிர்ச்சியாக இருக்கும். பொதுவாக அந்த மாதங்களில் மழை பெரியளவில் பெய்யாது. கோடை காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

ஒற்றைப் பனை மரம்

https://www.youtube.com/watch?v=K3zzaSu7uEI

'ஒற்றைப் பனை மரம்' என்கிற ஈழத் தமிழர் புதியவன் ராசையா என்பவர் இயக்கிய திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பற்றிய இயக்குனரின் நேர்காணல் ஒன்று யூடியூப் தளத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்னரே வெளிவந்துள்ளது. பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் வென்றுள்ளது.

ஈழத்தமிழர் உரிமைப் போரில் பங்கேற்று அதில் உயிர் தப்பிய போராளிகளின் போருக்கு பிந்திய அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு அமைந்தது என்பதை இப்படம் விளக்குகிறது. மேலும் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தற்போது தாயகம் திரும்பிய பின்னர், சாதாரண பொது மக்களில் ஒருவராய் வாழும் அன்றைய போராளிகளை எந்த மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதையும் உண்மையாக விளக்குகிறது. தற்போது இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு போராட்டக் குழுவை தமிழர்களிடையே உருவாகி விடக்கூடாது என்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதையும் இப்படம் விளக்குகிறது. ஈழ தமிழர்களைப் பற்றிய எந்தவித புரிதலும் இன்றி தமிழ்நாட்டில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றையெல்லாம் புறந்தள்ளும் விதமாக உண்மையை உண்மையாக உரைக்கும் திரைப்படமாக இப்படம் விளங்குகிறது. பல உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றிருப்பதே அதற்கு சான்றாகும்.

தற்போது அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்துள்ள இப்படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. அதாவது ஈழத் தமிழர்களை இயக்குனர் தரம் தாழ்த்தி இழிவுப்படுத்தியுள்ளதாக இப்படத்தை விரும்பாத எதிர்ப்பாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு படைப்பும் தான் விரும்பிய கருத்தினை மட்டும் சார்ந்து இருக்காது தம்மைப் பற்றியே சுயவிமர்சனமும் செய்து கொள்ளும் பாசாங்கற்ற நியாயமான படைப்பே உலகத்தரம் வாய்ந்த படைப்பாகும். இயக்குனரின் நேர்காணல் அதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. தமிழ்நாட்டில் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சை தேவையற்றது.

நன்றி வணக்கம்.

********மரடோனா : சொந்த பதிவு *********

ஒருவர் தன் வாழ்நாளில் செய்யும் ஒவ்வொரு செயலுமே மற்றவரை ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வெற்றியின் அளவுகோலாக நாம் கருதும் எல்லையை எட்டாது மனநிறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கையில் பலரது கனவு எல்லைகளை எளிதில் கடந்து வந்திருக்கிறோமென்ற எண்ணமே இல்லாது வாழ்ந்து கொண்டிருப்போம். அப்படிப்பட்ட பல கோடி பேர்களின் ஒருவன் தான் நான், மரடோனாவின் கால்பந்தாட்ட ரசிகன்.

இத்தாலியா 90, மரடோனாவின் மூன்றாவது உலக கோப்பை. எனது முதலாவது கால்பந்தாட்ட ரசிகன் உருவான வருடம். அதற்கு முன்னரே இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கோல்களை போட்டு விட்டாரென்றாலும் அந்த முப்பது வயதில் அவரது ஆட்டத்தின் முதிர்ச்சி சிறந்த முறையில் வந்திருக்க வேண்டிய உலக கோப்பை. அனால் அவரை தன்னியல்பில் எதிரணியினர் ஆட விடவில்லை. இறுதி போட்டி வரை மரடோனாவை குறிவைத்தே மற்ற அணியினர் விளையாடினர். இதனாலேயே அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியிடம் தோற்றது.

இருந்தாலும் இத்தாலியா 90 காலிறுதி சுற்றில் அர்ஜென்டினா பிரேசில் மேட்சை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . இந்திய நேரப்படி இரவு ஏழரைக்கு தொடங்கியதாக நியாபகம். முழு ஆட்டம் யூடியூபில் இன்றும் உள்ளது. 90 சதவிகித நேரம் பிரேசிலிடம் தான் பந்து இருக்கும். எந்த நொடியும் பிரேசில் கோல் போட்டு விடுவார்கள் என்றே ஆட்டம் போய்க்கொண்டிருந்தது. முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்தே இன்னும் கூடுதலான தாக்குதலுடன் களமிறங்கினர் பிரேசில் அணியினர். மரடோனா களத்தில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. அந்த இக்கட்டான தருணத்தில் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கோலாக மாற்ற உதவி புரிந்தார் மரடோனா. பிரேசிலின் பெருவாரியான வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் பாதியிலிருக்க மரடோனா அந்த பந்தை நடு பாதியிலிருந்து பிரேசிலின் எல்லை வரை கடத்தி கொண்டு வந்து கனிஜ்ஜியாவிடம் பந்தை லாவகமாக அடிக்க கனிஜியா பிரேசிலின் தடுப்பாட்டக்காரர்களுக்கு போக்கு காட்டி கோலுக்குள் திணிப்பார்.

இதில் கோல் அடித்தது கனிஜியா, அவருக்கு உதவியது மரடோனா. தலை சிறந்த பல கோல்களை மரடோனா இதற்கு முன் அடித்திருந்தாலும் இன்னொருவர் கோல் அடிக்க உதவி செய்து அதன் மூலம் அர்ஜெண்டினாவின் வெற்றியை உறுதி செய்த இந்த கோலே தலை சிறந்த கோலாக நான் கருதுவேன் . எப்போதெல்லாம் மரடோனா நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ஒரு கோலை மட்டும் யூடியூபில் பார்த்து ரசித்து விடுவேன்.

மரடோனாவின் இந்த ஆட்டம் எனது பணியிலும் பிரதிபலித்திருக்கிறது. சில தருணங்களில் நான் பாதியில் விட்ட வேலையை என்னுடைய அணியிலுள்ள யாரவது செய்து முடித்தால் அப்போது மரடோனா போல் நானும் சாதித்து விட்டதாக எண்ணிக் கொள்வேன்.

94லிலும் மரடோனா களமிறங்கினார். போதை பொருள் உட்கொண்டதாக பிடிபட்டு உலக கோப்பை பாதியிலேயே தடை விதிக்கப்பட்டு வெளியேறினார். அதன் பின் நடந்த உலக கோப்பையில் 98, 02,06 பார்வையாளராக கூச்சலிட்டு கொண்டிருந்தார்.

2010 உலக கோப்பையில் அர்ஜென்டினா அணியின் கோச்சாக இருந்தார். மெஸ்ஸியை பெரிதும் நம்பி ஏமாந்து போயிருப்பார். அவர் மட்டுமல்ல என்பதுதான் ஒரே ஆறுதல். பிரீமியர் லீக் விளையாடுவதற்கும் உலக கோப்பை விளையாடுவதற்கும் வெவ்வேறு மனநிலையும் பயிற்சியும் தேவை. ஒரு பிளேயர் பிரீமியர் லீகில் சிறப்பாக விளையாடுவதை வைத்து உலகின் தலைசிறந்த வீரரென கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. எப்படி ஐ பி எல்லில் சிறப்பாக விளையாடுபவர் ஒரு நாள் போட்டியில் சொதப்புவாரோ அவ்வாறே மெஸ்ஸி பிரீமியர் லீகில் சிறப்பாக விளையாடி உலக கோப்பையில் சொதப்புபவர் . இவரை போன்றே இங்கிலாந்தின் ரூனியும் போர்ச்சுக்களின் ரொனால்டோவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவர்களையெல்லாம் பார்க்கையில் கிளப் ஆட்டங்களில் மட்டுமில்லாது உலக கோப்பையிலும் ஜொலித்து 86இல் கோப்பை வாங்க உறுதுணை புரிந்துள்ளார் மரடோனா. அதனால்தான் அவர் ஹீரோ, உலகமே கொண்டாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

1. இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் எப்படியோ அவ்வாறே மரடோனா அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியிலிருந்தார்.

2. இந்திய அணியில் எக்காலத்திலும் ஒரு ஸ்டார் பிளேயர் இருப்பார். கவாஸ்கர், சச்சின் என தற்காலத்து கோலி வரை. அதை போலவே மரடோனாவிற்கு பிறகு ஏரியல் ஒர்டேகா, பட்டிஸ்டுடா தற்கால மெஸ்ஸி வரை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள்

3. ஒரு உலக கோப்பையை வெல்லும் எல்லா தகுதியும் இந்தியவிற்கு இருக்கும். ஆனால் இரண்டே முறை தான் வென்றிருக்கிறார்கள். அதை போலவே அர்ஜென்டினா அணியும் இரண்டு முறை தான் வென்றுள்ளார்கள்.

4. முக்கியமான பல மேட்ச்களில் இந்தியா எப்படி சொதப்புமோ அதை போலவே அர்ஜென்டினா அணியும் சொதப்புவதில் வல்லவர்கள்.

ஆகையால், அர்ஜென்டினாவும் இந்தியாவும் ஒரே கப்பலில் பயணிப்பதை போலத்தான் உணர்வேன். அவர்கள் ஆடும் ஆட்டம்தான் வேறு.

என்ன காரணத்தினால் உடல் நலனை பேணாது வாழ்ந்திருந்தாரென்று நமக்கு தெரியாது இருந்தாலும் அவரது இடத்தை பிடிப்பதற்கு ஒருவர் இந்நேரம் வந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

Locations of visitors to this page